பாலிவுட் நடிகைகள் பலரும் தங்களது திரை வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர பல சதி வேலைகள் நடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்கள். அண்மையில் நடிகை நீத்து சந்திரா இதுப்போன்ற குற்றச்சாட்டை முன்வைத்து பேட்டி அளித்திருந்ததே இந்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
இப்படி இருக்கையில், அவரைப்போன்றே நடிகை தனுஸ்ரீ தத்தாவும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து நீண்ட நெடிய பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில், தான் மிகவும் துன்புறுத்தப்படுவதாகவும், குறிவைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூலை 19 அன்று, தனக்கு நேர்ந்த கொடுமையை விளக்கி, தான் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன் என்றும், இங்கு தான் தங்கியிருப்பதாகவும் தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.
ALSO WATCH:
அதில், “நான் மிகவும் மோசமாக துன்புறுத்தப்படுகிறேன், குறிவைக்கப்படுகிறேன். தயவு செய்து யாராவது ஏதாவது செய்யுங்கள். கடந்த ஆண்டு என்னுடைய பாலிவுட் வேலை நாசக்கப்பட்டது. அதன் பிறகு மருந்துகள், ஸ்டீராய்டுகள் மூலம் என்னுடைய வீட்டில் உள்ள குடிநீரை கசக்கச் செய்தார்கள். இது கடுமையான உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது.
அதனால் கடந்த மே மாதம் உஜ்ஜயினுக்கு தப்பிச் சென்றேன். அப்போதும் வழியில் இரண்டு முறை எனது வாகனம் விபத்துக்குள்ளானது. மரணத்திலிருந்து தப்பித்து 40 நாட்களுக்கு பிறகு சாதாரண வாழ்க்கை மற்றும் வேலையை தொடர மீண்டும் மும்பைக்கே திரும்பினேன். இப்போது என் வீட்டிற்கு வெளியே அருவருக்கத்தக்க விஷயங்கள் நடக்கின்றன.
இதை அனைவரும் காது கொடுத்து கேளுங்கள். நிச்சயமாக நான் தற்கொலை மட்டும் செய்துக்கொள்ள மாட்டேன். இங்கேயேதான் தங்கப் போகிறேன். வேறெங்கும் செல்ல மாட்டேன். எனது பொது வாழ்க்கையை முன்பைவிட உயர்ந்த நிலைக்கு கொண்டு வருவேன்.
பாலிவுட் மாஃபியா, மகாராஷ்டிராவின் பழைய அரசியல் வட்டாரம் மற்றும் தீய தேசவிரோதக் குற்றவாளிகள் ஒன்றாகச் சேர்ந்து பொதுவாக மக்களைத் தொந்தரவு செய்ய இப்படிச் செயல்படுவார்கள். எனக்கு நேரும் இந்த சம்பவங்களுக்கு பின்னால் நான் அம்பலப்படுத்திய metoo குற்றவாளிகளும், NGOக்களும்தான் பின்னால் இருக்கிறார்கள் என்பதை தெளிவாகவும், உறுதியாகவும் நம்புகிறேன். இல்லையேல் நான் ஏன் இப்படியெல்லாம் குறிவைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவேன்? அவமானமாகவும், வெட்கக்கேடாகவும் இருக்கிறது.
View this post on Instagram
மகாராஷ்டிராவில் அனைத்தும் கைமீறிச் செல்கின்றன. ஆகையால் இங்கு குடியரசுத் தலைவர் அல்லது ராணுவ ஆட்சியை நிறுவ வேண்டும். ஏனெனில் இன்று நான் தாக்கப்படுவது போன்று நாளை வேறு ஒருவரும் துன்புறுத்தப்படலாம்.
கலைஞர்கள் மற்றும் ஒற்றைப் பெண்களுக்கு எப்போதும் பாதுகாப்பான புகலிடமாக இருந்தது. ஆனால் இனி இந்த ஊரில் சட்டம் ஒழுங்குக்கு இடமிருக்காது. இவற்றையெல்லாம் மீறிதான் என்னுடைய ஆன்மிக வழியை நாடிச் செல்கிறேன். சகோதரர்களே எனக்கு உதவுங்கள்” என உருக்கமாகவும், காட்டமாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக 2009ம் ஆண்டில் நானே படேகரின் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தனுஸ்ரீ தத்தா குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால் போதிய ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அதன் பிறகு பாலிவுட்டில் இருந்து விலகியிருந்தவர் கடந்த 2018ம் ஆண்டுதான் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தார்.
தற்போது பல தயாரிப்பாளர்களுடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பெண்களை மையமாக கொண்ட படங்களாக நடிக்க வேண்டும் என்பதில் தனுஸ்ரீ தத்தா உறுதியாக இருப்பதாகவும் இந்தி திரையுலக செய்திகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.
நீத்து சந்திராவை போல தனுஸ்ரீ தத்தாவும் விஷாலில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்ததும் நினைவுக்கூரத்தக்கது.