ரூட் தல, பஸ் டே என்ற பெயரில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தால் கடும் நடவடிக்கை: சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை

சென்னை: ரூட் தல மற்றும் பஸ் டே என்ற பெயரில் வன்முறை மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை பெருநகரில் உள்ள கல்லூரிகளில் கோடை விடுமுறைக்குப் பின்னர் இளங்கலை 2ம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த 18ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் சாலையில் கும்பலாகவும், பேருந்துகளில் கானா பாடல்கள் பாடியும், சாகசம் என்ற பெயரில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்பவர்களையும், முக்கியமாக கல்லூரிக்கு தினசரி வந்து செல்லும் பேருந்து மற்றும் இரயில் வழித்தடங்களில் ரூட் தல என்ற பெயரில் வன்முறை மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சம்பவங்களில் ஈடுபடாமல் மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் ரூட் தல மற்றும் பஸ் டே என்ற பெயரில் வன்முறை மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ” தற்போது அனைத்து கல்லூரிகளும் திறந்துள்ள நிலையில், அனைத்து கல்லூரிகளுக்கும் தகுந்த காவல்துறை பாதுகாப்புகள் அமைக்கப்பட்டு, கண்காணித்து வரப்படுகிறது. மேலும், கல்லூரி மாணவர்கள் செல்லும் முக்கிய பேருந்து மற்றும் இரயில் வழித்தடங்களிலும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வன்முறை அல்லது அடிதடி சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

ஆகவே, ரூட் தல என்ற பெயரில் வன்முறை, மோதல் சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள், பஸ்டே என்ற பெயரில் பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள், பேருந்து மற்றும் இரயில்களில் சாகசம் என்ற பெயரில் படிகளில் தொங்கியபடியும், பேருந்து மேற்கூரைகளின் மீது ஏறி பயணம் செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.