பிளாஸ்டிக் சர்ஜரி என்றவுடன் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது? மூக்கை கூர்மையாக்கிக் கொண்ட நடிகை… கறுப்பு நிறத்திலிருந்து வெள்ளையாக மாறிய பாப் பாடகர்… தலைமுடியை செயற்கையாய் வளர்த்துக்கொண்ட பிரபலங்கள்… நீங்கள் நினைப்பது சரிதான்! ஆனால், பிரபலங்களுக்கு மட்டுமேயான சிகிச்சை அல்ல இது. இந்தப் பட்டியலில் ஃபேக்டரியில் வேலை பார்க்கும்போது விரல்களை இழந்த ராஜேஷையும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சேர்த்துக்கொள்ளுங்கள்!
பிளாஸ்டிக் சர்ஜரி என்பது அழகுக்கலை சிகிச்சை என்று மட்டுமே நினைக்கிறோம். அதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் அவசர காலத்தில் ஒரு பிளாஸ்டிக் சர்ஜனின் பணி எவ்வளவு முக்கியமானது என்பதைத்தான் இந்தக் கட்டுரை வாயிலாக உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
ராஜேஷுக்கு 22 வயதுதான். வேலையில் சேர்வதற்கு முன் டிரெயினிங்கில் ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்தவர் தனக்கு இப்படியொரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்! இரும்பு பிளேட்டை வெட்டிக் கொண்டிருந்தபோது, நொடிப்பொழுதில் தெரியாமல் அவரின் வலது கை நடு விரல் மற்றும் ஆள்காட்டி விரல் கட்டரில் மாட்டி துண்டாகின. கிட்டத்தட்ட ஒரு இன்ச் அளவிற்கு விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில், 6 மணி நேரம் எங்கெங்கோ அலைந்து திரிந்துவிட்டு குளோபல் மருத்துவமனைக்கு ராஜேஷை அழைத்து வந்தனர்…
நீங்கள் படங்களில் கூட பார்த்திருப்பீர்கள், உடலின் ஏதோவொரு பாகம் துண்டாகிப் போனால் உடனடியாக அந்தப் பாகத்தை ஐஸ் பெட்டியில் வைத்து எடுத்துக்கொண்டு மருத்துவமனையை அணுகுவார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு விரைந்து செல்கிறோமோ அந்தளவுக்கு பாகத்தை உடலில் இணைப்பது சாத்தியமாகும். உடலில் இருந்து நீங்கிய பாகங்களின் செல்கள், ரத்த ஓட்டமும், ஆக்சிஜனும் கிடைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக இறக்க ஆரம்பிக்கும். ஐஸில் பாகங்களை வைக்கும்போது செல் இறப்பின் வேகம் குறைகிறது.
துண்டுபட்ட பாகத்தை உடலில் வைத்து தைத்தவுடன் அது மேஜிக் போல ஒட்டிக்கொள்ளாது. எலும்பு, தசைநார், நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் எல்லாம் அதன் அதன்இடங்களில் சரியாகப் பொருத்தப்பட வேண்டும். பின்னர் நுண்ணோக்கு கருவி மூலம் மிகமிக துல்லியமாக பாகங்களை இணைத்து தைக்க வேண்டும். மிக மிக சிக்கலான இந்த அறுவை சிகிச்சை முடிய 6 மணி நேரம் வரை பிடிக்கும். ராஜேஷின் விஷயத்தில் இதுதான் நடந்தது, 6 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரின் துண்டிக்கப்பட்ட விரல்கள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டன!
ராஜேஷை அதிர்ஷ்டசாலி என்பேன். காரணம், 6 மணி நேரம் தாமதித்தாலும், 24 மணி நேரமும் இயங்கும் முழு நேர பிளாஸ்டிக் சர்ஜரி துறை கொண்ட குளோபல் மருத்துவமனையை அவர்கள் நாடினார்கள். பல சந்தர்ப்பங்களில் இதுபோன்ற சரியான மருத்துவமனைகளை நாடுவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு இருப்பதில்லை. அவசரகதியில் பொன்னான நேரத்தை தொலைத்து விடுகின்றனர்.
இனியும் பிளாஸ்டிக் சர்ஜரியை அழகுக் கலை சர்ஜரி என்று சொல்வீர்களா?
ராஜேஷ் ஆலையில் வேலை செய்பவர், அவருக்கு கைகள் மிகவும் முக்கியம். இதேபோல செய்தி வாசிப்பாளருக்கு அவரின் தோற்றம் முக்கியம்தானே! கேமரா முன் வேலை செய்பவர்களின் முகத்தில் விபத்து காரணமாக அடிபடும்போது, அவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரிதான் ஒரே நம்பிக்கை. இதேபோல, மார்பகப் புற்றுநோயால் மார்பகத்தை இழப்பவர்களுக்கு மார்பக மறுவடிவமைப்பு சர்ஜரி இழந்த தன்னம்பிக்கையை மீண்டும் அளிக்கிறது!
வாய் புற்றுநோய் காரணமாக தாடை எலும்பை ஒரு நோயாளி இழந்திருந்தார். அதன்பின் அவரால் ஒழுங்காக சாப்பிடவும் பேசவும் முடியாமல் போனது. முகத்தை மறைத்தபடியே வாழ்ந்தும் வந்தார். அவரின் காலில் இருந்து ஒரு எலும்பை எடுத்து தாடை எலும்பு போல மறுசீரமைத்து, அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்தோம். இப்போது, அவரது வாழ்வே மாறிவிட்டது, பிடித்த உணவுகளை சாப்பிடவும், இயல்பாகப் பேசவும் முடிகிறது!
விபத்துகள், ஆசிட்காயம், தீக்காயம், வெட்டுக்காயம், பிறப்பிலேயே முகம் மற்றும் கைகளில் சிதைவுள்ள குழந்தைகள் இவர்களுக்கெல்லாம் பிளாஸ்டிக் சர்ஜரி ஒரு வரப்பிரசாதமாகும். வித்தியாசமான தோற்றம் காரணமாக கிண்டலுக்கு உள்ளாவோரின் நிலை பரிதாபத்துக்குரியது. குறிப்பாக குழந்தைகள் சிறுவயதிலேயே மன அழுத்தத்துக்கு ஆளாக நேரிடும். இது அவர்களின் எதிர்கால வாழ்க்கையையே சீர்குலைக்கவும் வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட தருணத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி தரும் தன்னம்பிக்கை ஈடில்லாதது. இச்சிகிச்சையைப் பெற்று பலனடைந்தவர்களின் கதைகள் இன்டர்நெட் முழுக்க இருக்கின்றன. வாய்ப்பிருந்தால் பாருங்கள், உங்கள் உள்ளத்தை அவை உருக்கிடும்!
அழகு என்பது தன்னம்பிக்கையை அதிகரிப்பது!
அழகு சம்பந்தப்பட்ட காஸ்மெட்டிக் சர்ஜரிகள் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து வருகின்றன. இருப்பினும் இந்த விஷயத்தில் நமக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவு இருத்தல் அவசியமாகும். நமக்குப் பிடித்த பிரபலம் போல மாற நினைப்பது நிஜத்துக்கு ஒத்து வராதது. எனவே, அனுபவமுள்ள நிபுணரின் ஆலோசனை பெற்ற பின்னரே, அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளும் முடிவை எடுக்க வேண்டும். சர்ஜரி மூலம் எது சாத்தியம், எது சாத்தியமில்லை என்பதை அவர்களால் மட்டுமே ஆலோசனை கூற முடியும்!
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி அளித்துள்ள மகத்தான விஷயம் பிளாஸ்டிக் சர்ஜரி. அதனை உயிரைக் காப்பாற்றவும், தன்னம்பிக்கையை அதிகரித்து வாழ்வில் முன்னேறவும் பயன்படுத்துவது அறிவார்ந்த செயலாகும்!