மீண்டும் திறக்கப்பட்ட அ.தி.மு.க அலுவலகம்: உள்ளே சென்ற இ.பி.எஸ் தரப்பு ஷாக்

ADMK office seal removed and handed over to EPS: அ.தி.மு.க தலைமை அலுவலகம் சீல் அகற்றப்பட்டு, எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் சாவி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், உள்ளே சென்று பார்த்த நிர்வாகிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட ஒற்றை தலைமை கோரிக்கை காரணமாக, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஒரு அணியும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஒரு அணியும் உருவானது. இதில் இ.பி.எஸ் தரப்பு ஒற்றை தலைமை கோரிக்கையை நிறைவேற்றி, அ.தி.மு.க.,வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக இ.பி.எஸ் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: அரசியல் அமைப்புச் சட்ட மீறல்; மருத்துவ சட்ட முரண்பாடு… நீட் விலக்கு பற்றி அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய மத்திய அரசு

இதற்கான சிறப்பு பொதுக்குழு கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு ஓ.பி.எஸ் வர, அவரது ஆதரவாளர்களுக்கும் இ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கும் மோதல் வெடித்து கலவரம் ஏற்பட்டது.

இருதரப்பினரையும் கட்சி அலுவலகத்தில் இருந்து காவல்துறையினர் வெளியேற்றிய பின்னர், வன்முறையை கட்டுப்படுத்தும் நோக்கில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

இந்தநிலையில், இந்த சீலை அகற்றக்கோரியும், அ.தி.மு.க அலுவலகத்தை தங்கள் வசம் ஒப்படைக்க கோரியும், ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் நேற்று (ஜூலை 20) தீர்ப்பளித்த நீதிமன்றம், அ.தி.மு.க அலுவலக சீலை அகற்றவும், அலுவலகத்தை இ.பி.எஸ் இடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது. மேலும் ஒரு மாதகாலத்திற்கு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அலுவலத்திற்கு செல்ல வேண்டாம் என்றும் நீதிமன்றம் கூறியது.

இதனையடுத்து இன்று வருவாய்த்துறை அதிகாரிகள் சீலை உடைத்து, சாவியை இ.பி.எஸ் தரப்பிடம் ஒப்படைத்தனர். 10 நாட்களுக்கு பின்னர் மீண்டும் அ.தி.மு.க அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமை அலுவலக பொறுப்பாளர் மகாலிங்கம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மட்டுமே இருந்தனர். மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெகஜீவன் ராம் சீலை, அகற்றி அலுவலக பொறுப்பாளர் மகாலிங்கத்திடம் சாவியை ஒப்படைத்தார்.

இதனையடுத்து உள்ளே சென்ற நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு கிட்டத்தட்ட அனைத்து பொருட்களுக்கும் சேதமடைந்து இருந்தன. தரைத்தளத்தில் உள்ள துணைப் பொதுச்செயலாளர் அறை, அவைத்தலைவர் அறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு முழுவதுமாக சேதப்படுத்தபட்டு இருக்கின்றன. ஆவணங்கள் கிழிக்கப்பட்டு இருக்கின்றன.

முதல் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் உள்ள நாற்காலிகள் அனைத்தும் உடைக்கப்பட்டிருக்கின்றன. அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கிழிக்கப்பட்டு இருக்கின்றன.

அடுத்ததாக கணினி அறையில், கம்ப்யூட்டர் டிஸ்ப்ளே ஸ்கீரின் மட்டுமே இருக்கின்றன. ஆவணங்களை மென்பொருளாக சேமித்து வைத்திருந்த சி.பி.யூ,க்கள் காணவில்லை. இதைத் தவிர அலுவலகத்தில் உள்ள பிற உபகரணங்கள், சி.சி.டி.வி உபகரணங்கள், பீரோக்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன.

அ.தி.மு.க அலுவலகம் திறக்கப்பட்டவுடன், சி.வி.சண்முகம் தலைமையிலான குழுவினர், செய்தியாளர்களுடன் உள்நுழைந்து சேதங்களை பார்வையிட்டனர். ஏனெனில் கடந்த 10 நாட்களாக அலுவலகம் பூட்டியுள்ள நிலையில், தற்போதைய நிர்வாகிகள் யாரும் கலவரம் நடந்த தினத்தில் இங்கு இல்லாததால், சேதங்களை ஊடகத்தினர் முன்னிலையிலே, அ.தி.மு.க நிர்வாகிகள் பார்வையிட்டனர்.

இதனையடுத்து, முழுமையான சேத விவரங்கள் மற்றும் காணாமல் போன பொருட்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் தயார் செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அ.தி.மு.க அலுவலகத்தில் இருந்த விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள் காணவில்லை. குறிப்பாக ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள், செங்கோல் மற்றும் வெள்ளி வேல் போன்றவற்றை காணவில்லை என சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.