ஸ்டெனோகிராபர் பணியிடத்துக்கு சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு தெரிந்தவர்கள்தான் பெரும்பாலும் பணியமர்த்தப்படுவர். கால மாற்றத்தால் தட்டச்சு கருவியின் இடத்தை கணினி ஆக்கிரமித்திருந்தாலும், ஸ்டெனோகிராபர் பணியிடத்துக்கு இன்றளவும் தட்டச்சு பயிற்சிதான் அடிப்படையாக உள்ளது.
தட்டச்சு பயிற்சி முடித்திருந்தால் எளிதில் வேலை பெறலாம் என்ற விழிப்புணர்வு 1980-களில்அதிகரித்தது. இதனால், தட்டச்சு பயிற்சி நிலையங்கள் அதிகளவில் தொடங்கப்பட்டன.
காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்ட இந்தத் தட்டச்சு பயிற்சி நிலையங்களில், பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி முடித்து வேலை தேடுவோர் வரை சாரை சாரையாக ஆர்வமுடன் சென்று வந்தனர். அந்தக் காலம் தட்டச்சு பயிற்சி நிலையங்களுக்கு பொற்காலமாக இருந்தது என்றால் மிகையல்ல.
ஆனால், கணினியின் வருகையால் தட்டச்சு பயிற்சியின் மீதான ஆர்வம் குறையத் தொடங்கியது. உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளால் பெரும்பாலானோர் அரசு வேலைக்குக் காத்திராமல், பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டனர்.
இதன் காரணமாக நேரடியாக கணினியைக் கையாளத் தெரிந்தால்போதும் என்ற மோகத்தில், தட்டச்சு பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை படிப்படியாக குறைந்து. இதனால், தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தட்டச்சு பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டன.
தட்டச்சு கருவி உற்பத்தி நிறுத்தப்பட்டதுடன், தட்டச்சு கருவிகள் பயன்படுத்தப்படாமலேயே பழுதடைந்தன.
இந்தநிலையில், கடந்த சில ஆண்டுகளாக தட்டச்சு பயிற்சிக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு, அரசு போட்டித் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கையும், பல்வேறு தனியார் நிறுவனங்களும் கணினியில் வேகமாக தட்டச்சுசெய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதுமே காரணமாகக் கூறப்படுகிறது.
தமிழக அரசின் குரூப் 4 பணியிடங்களில் தட்டச்சு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் கணக்கிடப்படுவதால், தற்போது தட்டச்சு பயிற்சி பெற அதிகம் பேர் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக மூடப்பட்ட பல தட்டச்சு பயிற்சி நிலையங்கள் மீண்டும் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து மன்னார்குடியில் தட்டச்சு பயிற்சி நிலையம் நடத்தி வரும் சி.கிருஷ்ணன் கூறியது:
தட்டச்சு பயிற்சியில் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டிலும் ஹையர் தேர்ச்சி மற்றும் ஆபீஸ் ஆட்டோமேஷன் தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு உறுதியாகக் கிடைக்கும் என்ற நிலை உள்ளது.
தட்டச்சு தகுதியுடன் சுருக்கெழுத்து பயிற்சியும் முடித்திருந்தால், நீதித் துறையில் மிக விரைவாக பணி கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
இதனால், தட்டச்சு பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 1,500 தட்டச்சு பயிற்சி நிலையங்களைத் திறக்க அரசு அங்கீகாரம் வழங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக முடங்கியிருந்த இந்தப் பயிற்சி நிலையத்தில் தற்போது தினமும் 300 பேர் வரை தட்டச்சு பயிற்சி பெற்று வருகின்றனர் என்றார்.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகவியல் சங்க துணைத் தலைவர் தஞ்சாவூர் பாலகிருஷ்ணன் கூறியது:
தட்டச்சு பயிற்சி அளிக்கும் டெக்னிக்கல் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதை அதிகரிக்கும் நோக்கில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டில் தட்டச்சு ஆசிரியர் பயிற்சியை அரசு நடத்தியது வரவேற்கத்தக்கது. இந்தப் பயிற்சியை ஆண்டுதோறும் நடத்த வேண்டும். தட்டச்சு கருவி உற்பத்தியை மீண்டும் தொடங்கும் வகையில் தொடர்புடைய நிறுவனங்களை அரசு ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.
தட்டச்சி பயிற்சியில் சேர கல்வித் தகுதி
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால்தான் தட்டச்சு தேர்வில் பங்கேற்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது 6-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தட்டச்சு தேர்வில் பங்கேற்று ப்ரி ஜூனியர் சான்றிதழும், 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஜூனியர் சான்றிதழும் பெற்று சீனியர் தேர்வில் பங்கேற்க முடியும்.
மேல்நிலை தொழிற்கல்வியில் உள்ள அலுவலக மேலாண்மை என்ற பாடப் பிரிவில், தட்டச்சு பயிற்சி செய்முறைப் பாடமாக உள்ளது.
எனவே, மேல்நிலை தொழிற்கல்வி பயின்றவர்கள், தட்டச்சு இளநிலை, முதுநிலை பயிற்சிகளுக்குச் செல்லத் தேவையில்லை. இந்த பாடப் பிரிவில் பயின்றவர்கள் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.