கர்நாடக மாநிலம், கடக் மாவட்டத்தில் உள்ள பலேஹோசூரில் புதிய பேருந்து நிறுத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் இந்த கோரிக்கைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனம் ஈர்க்கும் வகையில், தென்னை ஓலைகளை வைத்து தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைத்தனர். இந்த நிறுத்தத்தை எருமையை வைத்து, ரிப்பன் வெட்டி திறந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பலேஹோசூர் பேருந்து நிறுத்தத்தின் நிழற்குடை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்து விட்டது.
அன்று முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் பேருந்துக்காக மழை, வெயிலில் சாலையில் நின்று வருகிறோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, பேருந்து நிழற்குடை சீரமைக்க வேண்டும் என உள்ளூர் எம்எல்ஏ மற்றும் எம்பியிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம்.
ஒவ்வொரு முறையும், நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தும், இதுவரை எதுவும் செய்யவில்லை. ஆகையால், இந்த நூதன போராட்டம் மூலம் கோரிக்கையையும், கண்டனத்தையும் தெரிவிக்கிறோம்’ எனக் கூறினர்.