டெல்லி: ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து இந்தியாவிற்கு சீட்டா வகை சிறுத்தைகளை பெற இரு நாடுகளிடையே பெற ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா மற்றும் நமீபியா நாடுகளின் நலனைக் கருத்தில் கொண்டும், பரஸ்பர மரியாதை, இறையாண்மை, சமத்துவம் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் வனஉயிரின பாதுகாப்பு மற்றும் நிலையான உயிரி பல்லுயிர் பயன்படுத்துதலை ஊக்குவிப்பதற்கும், இரு நாடுகளும் பயனடையும் வகையிலான வளர்ச்சியை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தும். அதிவேகமாக ஓடக்கூடிய சீட்டா வகை சிறுத்தையின் எண்ணிக்கை இந்தியாவில் படிப்படியாக குறைந்த நிலையில் 1952ம் ஆண்டு பூஜ்யத்தை எட்டியதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாட்டின் 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு வெளிநாட்டில் இருந்து சீட்டா வகை சிறுத்தைகளை வாங்கி அதன் எண்ணிக்கையை பெருக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது. அதன்படி நமீபியாவிடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 15ம் தேதி மத்தியப்பிரதேச வன விலக்கு பூங்காவிற்கு சீட்டா வகை சிறுத்தைகள் கொண்டுவரப்பட உள்ளன. இந்த தகவலை சுற்றுசூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். 2020-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் வழங்கிய ஆணையின்படி, உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் வழிகாட்டுதல் மற்றும் உத்தரவின் பேரில் இந்தியாவில் சிறுத்தை மறுஅறிமுகத் திட்டத்தை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ஆகியவை மேற்கொண்டு வருகின்றன.