நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் திங்கள்கிழமை (ஜூலை 18) நடைபெற்றது.. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
முதல் சற்றில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்களின் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு ஆதரவாக 540 எம்பிக்களும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு 208 எம்பிக்களும் வாக்களித்துள்ளனர்.
15 எம்பிக்கள் செல்லாத வாக்கை பதிவு செய்துள்ளனர் எனறு தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாநிலங்களவை பொதுச் செயலாளருமான பி.சி. மோடி தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்பிக்களின் ஒட்டுமொத்த வாக்குகளின் மதிப்பு 5,23,600 ஆகும். இவற்றில் திரெளபதி முர்மு 3,78,000 வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா 1,45,600 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இந்தத் தேர்தலில் திரெளபதி முர்மு 60% வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், முதல் சுற்றின் முடிவில் அவர் 72% வாக்குகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.