புதுடெல்லி: சிவசேனா கட்சிக்கு உரிமை கோரி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவும் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மகாராஷ்டிராவில் நடைபெற்று வந்த சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கடந்த மாதம் கவிழ்ந்தது. சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்து பாஜகவுடன் இணைந்து ஆட்சியை அமைத்துள்ளனர். இந்நிலையில், 12 சிவசேனா எம்.பி.க்கள் சேர்ந்து, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் தனியாக மனு அளித்து, தங்களை தனியாகச் செயல்பட அங்கீகரிக்குமாறு கோரி உள்ளனர். இந்நிலையில், சிவசேனா கட்சிக்கு உரிமை கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு ஏக்நாத் ஷிண்டே தரப்பு கடிதம் எழுதியுள்ளது.
பதிலுக்கு தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்றும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி குழுவை சிவசேனாவாக அங்கீகரிக்கக் கூடாது என்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கும் போது தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று கேவியட் மனுவையும் உத்தவ் தாக்கரே கொடுத்துள்ளார்.
தகுதி நீக்க வழக்கு தள்ளிவைப்பு
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சென்ற 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸை தொடர்ந்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் சிவசேனா எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தவ் தாக்கரே தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். அவர் வாதிடும்போது, “மகாராஷ்டிராவில் புதிய அரசை ஆளுநர் பதவியேற்க அழைத்து இருக்கக் கூடாது. அது தவறு’’ என்றார்.
அப்போது நீதிபதிகள் கூறும் போது, ‘‘உத்தவ் தாக்கரே தலைமை யிலான சிவசேனா கோரும் விளக்கங்களுக்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியினர், தங்கள் பதிலை ஆவணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். சில பிரச்சினைகள் தொடர்பான வழக்குகளுக்கு அதிக நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கலாம் என நினைக்கிறோம். இந்த வழக்கை அதிக நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும்’’ என்று தெரிவித்தனர்.
இருதரப்பு வாதத்துக்கு பின்னர் இந்த வழக்கு ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
மேலும் இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரையில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்றும், அதுவரை தகுதி நீக்கம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேக்கருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மகாராஷ்டிரா சட்டப்பேரவைச் செயலர் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நீதிபதி என்.வி. ரமணா உத்தரவிட்டார்.