”கேலி பேச்சுகளால் அழுதிருக்கிறேன்”- நடிகர் திலகத்தின் Throwback பேட்டி #SivajiGanesan

தமிழ் சினிமாவில் தொடங்கிய வெள்ளித்திரைப் பயணத்தால் உலகமே கண்டு வியந்துப்போகும் அளவுக்கான தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி கலையுலகின் மாபெரும் ஆளுமையாக இருந்தவர் நடிகர் திலகம், செவாலியர், பால்கே சிவாஜி கணேசன்.

அப்படிப்பட்ட தன்னிகரற்ற கலைஞனாக திகழ்ந்த நடிப்பின் சக்கரவர்த்தியாக போற்றப்படும் சிவாஜி கணேசனின் 21-வது நினைவுநாள் இன்று.

தேசப்பற்றும், நற்சிந்தனையும் நிறைந்த சிவாஜி கணேசனின் நினைவு நாளில், சினிமாத் துறைக்கு அவர் வந்தபோதும், வந்த பிறகும் அவர் சந்தித்த நிலை குறித்து, அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்ததை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

image

அதன்படி, நடிகை மீனா நடிகர் திலகம் சிவாஜி கணேசனை நேர்காணல் செய்திருப்பார். அதில் தன்னுடைய வாழ்க்கையே விசித்திரமானது என்று கூறியே பேட்டியை தொடங்குவார்.

சிவாஜியின் நடிப்புக்கு நிகர் வேறு எவருமே இல்லை என்ற சொல்லாடல்தான் யாவருக்கும் நினைவில் எட்டும். அப்படிப்பட்டவரின் நடிப்பை கண்டு தொடக்கத்தில் பலரும் முகம் சுழித்திருக்கிறார்களாம்.

அதாவது நாடகத் துறையில் பெண் வேடம் உட்பட பற்பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும், சினிமாவில் சிவாஜியின் நடிப்பை கண்டு “என்ன இந்த பையன் இப்படி நடிக்கிறான். கடகடனு பேசுறான். கூழாங்கல்ல போட்டொ மெண்டு முழுங்குறா மாதிரி சொல்றான்” என சொன்னவர்கள் ஏராளமாம்.

image

ஏனெனில், வெள்ளித்திரைக்கென நடை, உடை, பாவனைகளுக்கெல்லாம் தனி உரைநடையே உண்டு. அதுபோக “நான் சினிமாக்குள்ள வர வரைக்கும் அவங்க ஒரு விதமா வளர்ந்து வந்தவங்க, நான் ஒரு விதமா வளர்க்கப்பட்டவன். அதனால் என்னோட மொழிநடை அவங்களால முதல்ல ஏத்துக்க முடியாம இருந்துச்சு” எனக் கூறினார் சிவாஜி.

“இது மாதிரியான கேலி பேச்சுகளையெல்லாம் கேட்டு அழுத காலமும் உண்டு. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வெளியே போய் நின்னு ஓ..ன்னு அழ ஆரம்பிச்சுடுவ. அப்போது இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சுவில் என்னிடம் வந்து இதுக்காகலாம் கவலைப்பட்டு உன் கவனத்தை சிதற விட்டுடாத. உறுதியா, விடா முயற்சியா ஆக்ட் பன்னுனு எனக்கு ஆறுதலாவும், உந்துதலாவும் பேசினாரு” என அவருக்கே உரிய பாணியில் அத்தனை சிறப்பாக சிவாஜி கூறியிருப்பார்.

பராசக்தி படம் குறித்து பேசிய சிவாஜி, “நான் படத்துல நல்லபடியா நடிப்போமா இல்லயானு தெரியுறதுக்கு முன்பே எனக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தவர் நேஷ்னல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். என் அம்மாக்கு பிறகு வணங்குற ஆளா இருப்பவர் பெருமாள் முதலியார்தான்” என உருக்கமாக தெரிவித்தார்.

image

முன்னதாக, பராசக்தி நாடகத்தை பார்த்து அதனை படமாக எடுக்க முடிவெடுத்த நேஷ்னல் பிக்சர்ஸ் பெருமாள், நாடக கலைஞரான சிவாஜியை நடிக்க வைக்க முடிவெடுத்திருக்கிறார். கிருஷ்ணன் பஞ்சு இயக்குநராகவும், கலைஞர் கருணாநிதியை வசனகர்த்தாவாகவும் முடிவானது. பராசக்தி படத்தில் நடிப்பதற்காக சிவாஜி கணேசனுக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்து பார்த்திருக்கிறார்கள்.

பராசக்தி படத்தின் கோர்ட் காட்சியை தாண்டி மிகவும் பரிட்சயமான ‘சக்சஸ்’ என்ற ட்ரேட் மார்க் வசனத்தை சிவாஜி முதலில் சரியாக பேசவில்லையாம். அதுபோக அவரது உருவமும் அத்தனை பொருத்தமாக அந்த கதாப்பாத்திரத்திற்கு அவர் இருந்திருக்கவில்லை எனக் கூறி வேறொருவரை ஹீரோவாக போடுங்கள் என பலரும் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் தயாரிப்பாளர் பெருமாள், சிவாஜியை ஆரோக்கியமாக சாப்பிட வைத்து, அவருக்கு சிலம்பம் பயிற்சியும் கொடுத்துதான் பராசக்தியில் நடிக்க வைத்திருக்கிறார். அந்த படம்தான் தமிழ் சினிமாவை புராண காலத்து கதையில் இருந்து சமூக சமத்துவம் சார்ந்த கதையை நோக்கி பின்னாளில் இட்டுச் செல்ல வைத்திருக்கிறது.

image

இது தொடர்பாக பேசியிருந்த சிவாஜி, “தன்னுடைய சினிமா பயணம் ஆகாயத்துல இருந்து தொடங்கியதா கூறியிருப்பார். பராசக்தில நடிக்குறதுக்காக அழைப்பு வந்தபோது திருச்சியில் ஒரு நாடக கம்பெனியில் இருந்தேன். அப்போ சென்னைக்கு போக ஃப்ளைட்டுலதான் சென்றேன். அங்க பராசக்தியில நடிக்க செலக்ட் ஆனதோட, ஒரு 5 வருஷத்துக்கு சினிமாவுல நடிக்கவும் அக்ரிமெண்ட்டும் போட்டதா” சொல்லியிருக்கார். அப்போது சிவாஜியின் மாத வருமானம் எவ்வளவாக இருந்திருக்கும் தெரியுமா? வெறும் 750 ரூபாய்தான் அவரது சம்பளம் என சிவாஜியே கூறியுள்ளார்.

தற்போதைய சினிமா உலகில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் திரைத்துறையில் தடம் பதிப்பது பெருமையாக கருதப்பட்டாலும், அந்தக் காலத்தில் நாடக மேடையில் மட்டுமே நடித்து வந்த ஒரு சாமானிய வாலிபன் இன்று செவாலியராக உருவெடுத்து நடிப்புக் கழகமாக இருக்கும் சிவாஜி கணேசனை எந்நாளும் நினைவுக்கூர்வோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.