அகமதாபாத்: ஹரியாணாவின் ஆரவல்லி மலைத்தொடரில் ஏராளமான சட்டவிரோத சுரங்கங்கள் செயல்படுகின்றன. இந்த மலையில் இருந்து கற்களை வெட்டி கடத்துவதை தடுக்க முயன்ற போலீஸ் டிஎஸ்பி சுரேந்திர சிங் நேற்றுமுன்தினம் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டம் போர்சாத் நகரில் காவலர் கிரண் ராஜ் நேற்று அதிகாலை 1 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த லாரியை தடுத்து நிறுத்த கிரண் ராஜ் முயன்றார். ஆனால், அந்த லாரி நிற்காமல் ராஜ் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுபோல ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் துபுதனா பகுதியில் பெண் காவல்ஆய்வாளர் சந்தியா டாப்னோ வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த வேன் மோதியதில் சந்தியா உயிரிழந்தார்.
இதையடுத்து அந்த வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்ததுடன், ஒட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் காவல்துறையினர் 3 பேர் அடுத்தடுத்து வாகனம் ஏற்றி கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.