திருமலை: இன்றைய ஸ்மார்ட்போன் யுகத்தில் சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமடைய பலர் எதற்கும் துணிந்து செயல்படுகின்றனர். எதையாவது வித்தியாசமாக செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டால் ஒரேஇரவில் ‘ஸ்டார்’ ஆகிவிடலாம் என நினைக்கின்றனர். இதற்காக எந்த ‘ரிஸ்க்’ எடுக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. இந்நிலையில் மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் பயணிகள் முன் குத்தாட்டம் போட்டு இணையதளங்களில் பதிவேற்றியுள்ளார். அதுபற்றிய விவரம் :தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மெட்ரோ ரயில் நிலையம் பயணிகள் கூட்டநெரிசலுடன் எப்போதும் பரபரப்பாக காணப்படும். கடந்த 2 நாட்களுக்கு முன் இளம்பெண் ஒருவர் தனது தோழிகளுடன் மெட்ரோ ரயிலில் ஏறினார். நடிகை போல மேக்கப், உடைகள் அணிந்திருந்தார். ரயிலில் ஏறிய அந்த இளம்பெண் தனது தோழியிடம் செல்போனை கொடுத்துள்ளார். அதில் பிரபலமான தெலுங்கு பாடலை ஒலிபரப்ப செய்தார். பின்னர் அந்த பாடலுக்கு ஏற்ப குத்தாட்டம் ஆடினார். அதன் பின்னர் ரயிலில் இருந்து இறங்கிய அவர், ரயில் நிலையத்திலும் ஆட்டம் போட்டார். மேலும் அந்த வளாகத்தில் நின்றபடி போஸ் கொடுத்தார். இந்த காட்சிகள் அனைத்தையும் அவரது தோழி செல்போனில் படமாக்கினார். தனது நடனத்தை அந்த இளம்பெண், சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.இதை பார்த்த நெட்டிசன்கள், சிலர், இளம்பெண்ணின் அழகையும், ஆட்டத்தையும் பாராட்டியுள்ளனர். சிலர், ‘மெட்ரோ ரயிலில் நீங்கள் போட்ட குத்தாட்டத்தை நேரில் பார்த்தவர்கள் கூட ரசிக்கவில்லையே, அதனை ஏன் இணையதளங்களில் பதிவிட்டீர்கள்? என்றும், பொது இடத்தில் இதுபோன்று நடந்துகொள்ளலாமா? எனவும் விமர்சித்துள்ளனர்.இதனிடையே இந்த காட்சிகள் குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் கடுமையாக எச்சரித்துள்ளது இதுதொடர்பான அறிவிப்பில், ‘விதிகளை மீறி ஐதராபாத் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடனமாடியது ஏற்புடையது அல்ல. அந்த இளம்பெண் யார்? என கண்டறிந்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு புகார் அளிக்கப்படும்’ என தெரிவித்துள்ளது.