‘என்னை மன்னிச்சுடுங்க.. பணத்துக்காக செஞ்சுட்டேன்’ – லாலை பின்தொடர்வார்களா பிரபலங்கள்?

பண கஷ்டம் காரணமாக ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்ததாகவும், இனிமேல் அதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்றும் மூத்த நடிகர் லால் மன்னிப்புக் கோரியுள்ளார்.
பிரபல மலையாள நடிகரும், இயக்குநருமான லால் தமிழில் ‘எங்கள் அண்ணா’, ‘சண்டக்கோழி’, குட்டிப்புலி’, ‘சீமராஜா’, ‘கர்ணன்’, ‘டாணாக்காரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதுவும் ‘டாணாக்காரன்’ படத்தில் ஈஸ்வரமூர்த்தியாக நடித்து மிரட்டியிருப்பார். தற்போது மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் திருக்கோவிலூர் மலையமான் கதாபாத்திரத்தில் நடிகர் லால் நடித்துள்ளார்.
இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்துவதாக அறிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கின்போது, பொருளாதார நெருக்கடி காரணமாக ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டால், கடுமையான பிரச்சனைகள் மற்றும் தற்கொலைகள் நடக்கும் என்பது அப்போது தனக்கு தெரியாது என்றும் நடிகர் லால், மனோரமா பத்திரிக்கை இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ளார்.
image
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “அரசின் அனுமதியுடன்தான் இந்த விளம்பரத்தில் நடிக்க என்னை அழைப்பதாக நினைத்தேன். ஏற்கனவே பல நடிகர்கள் இதுபோன்ற விளம்பரங்களில் நடித்திருப்பதால், இவ்வாறான பின்விளைவுகள் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. நான் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்ததால், இந்த விளம்பரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்ததற்காக மிகவும் வருந்துகிறேன். இனிமேல் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன். நான் நடித்த இந்த விளம்பரத்தின் மூலம் யாரையாவது தவறாக வழிநடத்தி, அதன்மூலம் அவர்கள் துன்பங்களை அனுபவித்திருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று லால் கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, கேரள சட்டசபையில் அம்மாநில எம்.எல்.ஏ.வான கே.பி. கணேஷ் குமார், ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்களை விமர்சித்திருந்தார். மேலும், இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களை அந்த விளம்பரங்களில் இருந்து விலகுமாறு அரசு கேட்டுக்கொள்ள வேண்டும் என்று எம்.எல்.ஏ. கே.பி. கணேஷ் குமார் விவாதம் செய்தார். அத்துடன் ஷாரூக்கான், விராட் கோலி போன்ற பிரபலங்கள், ஆன்லைன் ரம்மி போன்ற செயலிகளின் வணிகத்தை அதிகரிக்கும் வகையில் நடிப்பதாகவும், இந்த செயலியின் பின்விளைவுகளை அறியாமல், விஜய் யேசுதாஸ் மற்றும் ரிமி டாமி போன்ற கலைஞர்களும் நடிப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
image
இஸ்ரோவில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வந்த கேரளாவைச் சேர்ந்த வினீத் என்ற இளைஞர், ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கி இந்த விளையாட்டின் மூலம் ரூ.21 லட்சத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டாதாகவும் சொல்லப்படுகிறது.
இதுபோல் இந்த விளையாட்டிற்கு அடிமையாகி பணத்தை இழந்தநிலையில், பலரும் தற்கொலை செய்துக்கொண்டதை அடுத்து, ஆன்லைன் ரம்மிக்கு முழுத் தடை விதிக்கும் வகையில் விளையாட்டு சட்டத்தில் திருத்தம் செய்து, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆன்லைன் ரம்மி விளையாட்டு சட்டவிரோதம் என அறிவித்து, அதனை தடையும் செய்தது கேரள அரசு. ஆனால், இதனை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், கேரள அரசின் தடையை நீக்கி, கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
image
எனினும், இந்த விளையாட்டால் தற்கொலைகள் தொடர்ந்தநிலையில், மீண்டும் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை கொண்டுவர கேரள அரசு பரிசீலித்து வருகிறது. இந்நிலையில், நடிகர் ஒருவர் தானாகவே முன்வந்து இவ்வாறு தெரிவித்துள்ளார். மற்ற பிரபலங்களும் இவரை பின்தொடர்வார்களா என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்றே சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.