புதிய ஜனாதிபதிக்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் வாழ்த்து தெரிவிப்பு

 

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல வெளிநாட்டு இராஜதந்திரிகள் இலங்கைக்கான தமது நாட்டின் அர்ப்பணிப்புடனான ஒத்துழைப்பை மீண்டும் வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்..

அத்துடன் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் Julie Chung தெரிவித்துள்ளார்.

அவர் இந்த சவாலான காலங்களில், பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கும், ஜனநாயகம் மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநிறுத்துவதற்கும், அனைத்து இலங்கையர்களுக்கும் நிலையான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கும் அனைத்துத் தரப்பினருடன் ஒன்றிணைந்து செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கையின் அரசியலமைப்பின் விதிகளுக்கு அமைய இலங்கையின் பாராளுமன்றம் இன்று ரணில் விக்கிரமசிங்கவை இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

மேலும் கருத்து தெரிவிக்கையில் இலங்கையின் நெருங்கிய நட்பு நாடும், அயல்நாடும் மற்றும் சக ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் இலங்கையில் ஜனநாயக விழுமியங்களுடன் நாட்டின் பொருளாதார மீட்சிக்காகவும், அரசியலமைப்பின் ஸ்திரத்தன்மையை நிலை நாட்டவும், எப்பொழுதும் ஆதரவாக இருப்போம் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற ஐக்கிய இராச்சியம் எதிர்பார்த்துள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் Sarah Hulton தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு அனைத்து இலங்கையர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு ஐக்கிய இராச்சியம் (UK) தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் அவர் கூறுகையில் “அமைதியான முறையில் போராட்டங்களை மேற்கொள்ள உரிமை உள்ளதாகவும், ஜனநாயக முறையில் செயற்பட்டு அரசியலமைப்பை பாதுகாக்குமாறு அனைத்து தரப்பினரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் கூறியுள்ளார் .

இலங்கையின் அரசியலமைப்பிற்கு அமைவாக பாராளுமன்றத் தேர்தலில் பு‌திய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதை கனடா கவனத்தில் கொள்கிறது என கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை மக்கள் எதிர்நோக்கும் கஷ்டங்களைத் தணிக்க அவசர அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை நோக்கிய முயற்சிகளை அதரவளிப்பதாகவும், இந்த நெருக்கடியை எதிர்கொள்ள இலங்கை அரசாங்கம் செயற்படும் போது ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தவும் மதிக்கவும் நாங்கள் வலுவாக ஆதரவினை வழங்க உள்ளோம் என்று கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க ஜனநாயக முறையின் படியும் அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சர்வதேச நாணய நிதியம் (IMF) உட்பட நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி செயற்பட புதிய அரசாங்கம் மற்றும் மக்களுக்கு அவுஸ்திரேலியா தனது பூரண ஆதரவினை வழங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இலங்கையின் 9 வது ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை இலங்கை பாராளுமன்றம் தெரிவு செய்துள்ளதாக இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் தெரிவித்துள்ளார். மேலும் புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமனம் உள்ளிட்ட அரசியல் மாற்றத்திற்கான முதல் படி இதுவாகும் எனவும் மக்களின் விருப்பத்திற்கு இணங்க, புதிய அரசாங்கம் அமையும்
எனவும் கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில் பொருளாதார நெருக்கடியின் விளைவாக இலங்கையர்கள் தொடர்ந்து அதிக துன்பங்களை எதிர்கொள்கின்றனர் எனவும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வதும், அதற்கான பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்துவதும் அவசரத் தேவையாக உள்ளது எனவும் இந்த சவாலான நேரத்தில் இலங்கையர்களுக்கு உதவ நியூசிலாந்து சர்வதேச நாடுகளுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்ற தயார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.