பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு கடந்த செவாய்க்கிழமை இரவு கடும் வயிற்றுவலி ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து அவர் சண்டிகரிலுள்ள தனது வீட்டிலிருந்து விமானம் மூலம் டெல்லியின் இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இது தொடர்பாக மாநில அரசு எந்த விதத் தகவலும் வெளியிடவில்லை.
முதல்வர் பகவந்த் மான் டெல்லி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. முதல்வர் பகவந்த் மான் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுல்தான்பூர் லோதியில் உள்ள புனித ஆறான காளி பீனிலிருந்து நேரடியாக ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்ததாகவும், அதன் காரணமாக அவருக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. காளி பெயின் சுத்தம் செய்யப்பட்ட 22 -வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் சுல்தான்பூர் லோதிக்கு பகவந்த் மான் சென்றிருந்தார்.
அந்த விழாவில் பகவந்த் மான், மரக்கன்றுகள் நட்டதாகவும், ஆற்றில் தண்ணீர் குடித்ததாகவும் அரசு கூறியிருந்தது. மேலும், பகவந்த் மான் ஆற்றுநீரைக் குடிக்கும் படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இதற்கிடையில் பகவந்த் மான் நேற்றிரவு 8 மணியளவில், சித்து மூஸ்வாலா கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் துப்பாக்கி தாரிகளுக்கு எதிரான நடவடிக்கையை வெற்றிகரமாகச் செய்ததற்காக, பஞ்சாப் காவல்துறை மற்றும் குண்டர் தடுப்பு அதிரடிப் படைக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.