கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் 17 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆதிச்சபுரம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற வந்த அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்திருக்கும் இச்செயல் புதிது அல்ல. 17 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 2005 ஆம் ஆண்டு அப்பள்ளியில் இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றது. இது தொடர்பாக எத்தனை மாணவர்கள் இறந்துள்ளனர் என்பது குறித்து அப்போதே பட்டியலும் வெளியிடப்பட்டது. அப்போதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டது” என்று தெரிவித்தார்.
“இந்தப் பள்ளிக்கூடம் முழுக்க முழுக்க பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வகுப்புவாத சக்திகள் நடத்தும் பள்ளிக்கூடம். இந்துத்துவா கொள்கைகளை புகுத்துவதற்காக இப்பள்ளி நடத்தப்படுகிறது. இந்துத்துவா சக்திகளின் செல்வாக்கை பெற்றிருந்ததால் 2005 ஆம் ஆண்டு முதல் மாணவி இறக்கும் நாள் வரை மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளது. இந்துத்துவா சக்தியை கண்டு அஞ்சு நடுங்கியதால் மாவட்ட நிர்வாகம் எதையோ பெற்றுக் கொண்டு கண்டும் காணாமல் இருந்துள்ளது. இதனாலேயே தற்போது நாம் ஒரு மாணவியை இழந்துள்ளோம்.
தஞ்சையில் உள்ள சாஸ்திரா பல்கலைக்கழகம் இந்துத்துவா கொள்கைகளை பின்பற்றும் ஓர் கல்வி நிறுவனம் ஆகும். தமிழக அரசுக்கு சொந்தமான திறந்தவெளி சிறைச்சாலை அமைய இருந்த இடத்தில் சட்டத்திற்கு புறம்பாக சாஸ்திர பல்கலைக்கழக கட்டிடங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. புறம்போக்கு நிலங்களில் சிறு குடிசைகள் இருந்தால் அவற்றை அரசு அதிகாரிகள் உடனடியாக அப்புறப்படுத்துகின்றனர். ஆனால் தமிழக அரசுக்கு சொந்தமான நிலத்தில் திறந்தவெளி சிறைச்சாலை அமைய வேண்டிய இடத்தில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள சாஸ்திரா பல்கலைக்கழகத்தை அப்புறப்படுத்த அரசு அதிகாரிகள் அஞ்சுகின்றனர். இந்துத்வா சக்திகள் ஆதிக்கம் செலுத்துவதால் மாவட்ட நிர்வாகம் அச்சப்படுகிறது.
மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்ற அகம்பாவத்தில் விருப்பம் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மாநில அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். திமுக கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ அல்லது இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டணியிலிருந்து திமுகவோ வெளியேறாது. தமிழகத்தில் வகுப்புவாதம் தலைதூக்க விடமாட்டோம். அதற்காக என்ன விலையையும் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மக்கள் பிரச்சனையில் கடந்த ஓராண்டுக்கு முன்னர் எவ்வாறு செயல்பட்டதோ அவ்வாறே தற்போதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது.
அதிமுக ஆட்சியில் மக்கள் பிரச்சனைக்கு செவி சாய்க்கவில்லை. அதனால் போராட்டங்கள் நடைபெற்றது. மக்கள் பிரச்சினைகள் குறித்து அறிக்கை வெளியிட்ட உடனேயே தற்போது திமுக அரசு பிரச்சனைக்கு தீர்வு காணும் போது வீதியில் இறங்கி போராட வேண்டிய தேவை இல்லை. பிரதமர் மோடி மக்கள் விரோத தலைவர். ஒரு பாசிஸ்டை எதிர்க்க திமுக தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து ஒன்றாக இயங்கும். தமிழகத்தில் உள்ள 39 எம்பி பதவிக்கான இடங்களிலும் பாஜக வெற்றி பெறும் என அண்ணாமலை கனவு காண்பதை நான் தடுக்க விரும்பவில்லை” என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM