புதுடெல்லி: தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரிய மேல்முறையீட்டு மனு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நீதிபதிகள் சந்திராசூட், சூர்யகாந்த் மற்றும் போபண்ணா அமர்வில், வேதாந்தா நிறுவனம் தரப்பில் நேற்று ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், ‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்குகளை விரைந்து பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும்,’ என வேண்டுகோள் விடுத்தார். அதை நிராகரித்த நீதிபதிகள், ‘வேண்டுமானால், வழக்கை விசாரணைக்கு பட்டியலிட முயற்சி செய்கிறோம். ஆனால், குறிப்பிட்டு எந்த ஒரு தேதியையும் தெரிவிக்க முடியாது,’ என உத்தரவிட்டனர்.