அவுஸ்திரேலியாவில் விமான நிறுவனம் ஒன்று, பெற்றோருக்கு ஒரு விமானத்திலும், ஒரு வயது குழந்தைக்கு வேறொரு விமானத்திலும் பயண இருக்கையை புக் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்கள் 13 மாத மகளை வேறு விமானத்தில் ஏற்றிச் செல்ல குவாண்டாஸ் நிறுவனம் மறுபதிவு செய்ததைக் கண்டு கொந்தளித்தனர்.
ஸ்டீபனி மற்றும் ஆண்ட்ரூ பிரஹாம் எனும் அந்த தம்பதி, விமான நிறுவனம் தங்கள் தவறை ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறினர்.
அவர்கள் தற்போது ஐரோப்பாவில் விடுமுறையில் உள்ளனர் மற்றும் விமான நிறுவனம் செய்த பிழையின் காரணமாக அவர்கள் கூடுதலாக பல நாட்கள் வெளிநாட்டில் தங்கியிருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
PC: Stephanie Braham
குவாண்டாஸ் நிறுவனம் தம்பதியினருக்கு அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் விமானம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று கூறியபோது இந்த பிரச்சினை தொடங்கியது. ஆனால் தம்பதி முன்பதிவு செய்த விமானம் இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட விமானத்தில் தங்கள் ஒரு வயது மகளுக்கு இருக்கை முன்பதிவு செய்ததை அறிந்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த பிரச்சினை காரணமாக, 24 மணி நேரத்தில் குவாண்டாஸ் நிறுவனத்துடன் 55 தனித்தனி தொலைபேசி அழைப்புகள் செய்து, தொலைபேசியில் மட்டும் 20 மணி நேரம் 47 நிமிடங்கள் 13 வினாடிகள் செலவிட்டதாக கூறினர்.
PC: Stephanie Braham
இறுதியாக புதிய விமானத்தில் தங்களுக்கும் மகளுக்கும் டிக்கெட் புக் செய்ய அவர்கள் ஒப்புந்தகொண்டனர் என்று அவர்கள் கூறினர்.
விமான நிறுவனத்தின் இந்த தவறால், அவர்கள் இப்போது ரோமில் இன்னும் இரண்டு வாரங்கள் கழிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும், இத்தனை நாட்களுக்கு தங்குமிடத்திற்காக பெரும் பணத்தை வாரி இறைக்கவேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குவாண்டாஸ் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் விமான நிறுவனம் குடும்பத்திடம் “உண்மையாக மன்னிப்பு கேட்கிறது” என்று கூறியது. தவறுக்கு “back-end administrative error” என்று அது குற்றம் சாட்டியது. மேலும், இந்த குடும்பம் தங்குமிடத்திற்கான செலவை திருப்பிச் செலுத்தவும் முன்வந்துள்ளது.