சண்டிகர்: பாடகர் மூஸ்சேவாலாவை சுட்டுக் கொன்ற குற்றவாளிகளை சரண் அடையும்படி எச்சரித்தும் துப்பாக்கிச்சூடு நடத்தியதால், வேறு வழியின்றி சுட்டுக்கொன்றதாக பஞ்சாப் போலீசார் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாநிலம், மான்சா மாவட்டத்தில் பாடகரும், காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூஸ்சேவாலா கடந்த மே 29ம் தேதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை டெல்லி சிறப்புப்படை போலீசார் கைது செய்தனர். மற்றொரு பிரிவை சேர்ந்த ஜக்ரூப் சிங் ரூபா மற்றும் மன்பிரீத் சிங் (எ) மண்ணு குசா உட்பட 3 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், பஞ்சாப்பில் உள்ள பக்னா கிராமத்தில் ரூபாவும், குசாவும் பதுங்கி இருந்தனர். அங்கு நேற்று முன்தினம் விரைந்த போலீசார் இருவரையும் சுட்டுக்கொன்றனர். இது குறித்து அமிர்தசரஸ் காவல்துறை துணை ஆணையர் புல்லார் கூறுகையில், ‘‘மூஸ்சேவாலாவை சுட்டுக் கொன்றவர்களை உயிருடன்தான் பிடிக்க விரும்பினோம். அவர்களை சரண் அடையும்படி எச்சரித்தோம். ஆனால், அவர்கள் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். எனவே, அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களை இந்த கட்டிடத்தில் இறக்கி விட்டு சென்ற வாகனத்தை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என தெரிவித்தார்.* தந்தை பாராட்டுமூஸ்சேவாலாவின் தந்தை பல்கவுர் சிங், அமிர்தசரஸ் மருத்துவமனைக்கு நேற்று வந்து, சுட்டுக் கொல்லப்பட்டரூபா, குசாவின் சடலங்களை பார்த்தார். பின்னர், அவர் அளித்த பேட்டியில், ‘போலீசாரின் இந்த நடவடிக்கையை பாராட்டுகிறேன். இது தொடக்கம்தான். குற்றவாளிகளுக்கு எதிரான போலீசாரின் நடவடிக்கை தொடர வேண்டும்,” என்றார்.