புதுடெல்லி: கடற்கரைகளுக்கான நீலக்கொடி சான்றிதழ் பெற சர்வதேச கடற்கரைகளுக்கு இணையாக மேம்படுத்த தமிழகத்தின் கோவளம் உட்பட 10 கடற்கரைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே வியாழக்கிழமை மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதில்: ஒருங்கிணைந்த கடற்கரை பகுதி நிர்வாக திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் கடற்கரை, சுற்றுச்சூழல் மற்றும் அழகியல் நிர்வாக சேவைகள் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் மாசுக்கட்டுப்பாடு, கடற்கரை விழிப்புணர்வு, அழகியல், பாதுகாப்பு கண்காணிப்பு பணிகள், சுற்றுச்சூழல் கல்வி தொடர்பான பல்வேறு பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. நீலக்கொடி கடற்கரை சான்றிதழுக்காக சர்வதேச தரநிலைகளை எட்டுவதை நோக்கமாக கொண்டு தெரிவு செய்யப்பட்ட கடற்கரைகளில் இந்தப் பணிகள் செய்யப்படுகின்றன.
மிகச்சிறந்த சர்வதேச கடற்கரைகளுக்கு இணையாக மேம்படுத்த 6 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 10 கடற்கரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட கோவளம் கடற்கரையும், புதுச்சேரியில் ஈடன் கடற்கரையும் அடங்கும் என்று தெரிவித்துள்ளார்.