புஷ்பா 3ம் பாகத்திற்கும் வாய்ப்பு இருக்கு : பஹத் பாசில் தகவல்
சில மாதங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் தெலுங்கில் உருவாகி பான் இந்தியா படமாக வெளியானது புஷ்பா தி ரைஸ் படம். செம்மரக்கடத்தில் பின்னணியில் உருவாகியிருந்த இந்த படத்தில் அல்லு அர்ஜுன் மிகப்பெரிய கடத்தல்காரனாகவும் அவரை பிடிக்க நினைக்கும் சாடிஸ்ட் போலீஸ் அதிகாரியாக நடிகர் பஹத் பாசிலும் நடித்திருந்தனர். கதாநாயகியாக ராஷ்மிகா நடித்திருந்தார். இந்த படத்தின் கதையைம்சம் மற்றும் ராஷ்மிகா நடித்த சாமி சாமி பாடல், சமந்தா சிறப்பு தோற்றத்தில் நடித்த ஓ ஆண்டவா பாடல் என பல ஹைலைட்டான அம்சங்கள் இந்த படத்தின் வெற்றிக்கு துணையாக இருந்தன.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா ; தி ரூல் என்கிற பெயரில் தயாராகி வருகிறது. மேலும் இந்த இரண்டாம் பாகத்தில் இன்னொரு வில்லன் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார் என்கிற தகவலும் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த பஹத் பாசில் சமீபத்தில் தனது வேறொரு படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது புஷ்பா படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு இந்த படத்திற்கு மூன்றாம் பாகம் கூட உருவாக வாய்ப்பு இருக்கு என்கிற புதிய தகவலை கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, இந்த படத்திற்குள் நான் நுழைந்தபோது இரண்டு பாகங்கள் என்கிற ஐடியாவே அப்போது எழவில்லை. அதன்பிறகு சில நாட்கள் கழித்து இயக்குனர் சுகுமார் இந்த படத்தை இரண்டு பாகமாக கொண்டு செல்வதற்கு தேவையான அளவு விஷயங்கள் தன்னிடம் இருப்பதாக கூறி படத்தை இரண்டு பாகங்களாக பிரித்தார். நானும் அல்லு அர்ஜுனும் மோதும் போலீஸ் ஸ்டேஷன் காட்சி படத்தின் இன்டர்வல் காட்சியாக தான் எடுக்கப்பட்டது. ஆனால் பின்னர் இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யும் முடிவு எடுக்கப்பட்டதால் இந்த காட்சி முதல் பாகத்தில் கிளைமாக்ஸ் காட்சியாக அமைந்தது.
சமீபத்தில் இயக்குனர் சுகுமார் உடன் பேசிக் கொண்டிருக்கும்போது இந்த படத்திற்கு மூன்றாம் பாகம் கூட எடுக்கலாம்.. அந்த அளவுக்கு இன்னும் விஷயங்கள் இருக்கின்றன என்று என்னிடம் கூறினார். அதனால் இதற்கு மூன்றாம் பாகத்தை கூட எதிர்பார்க்கலாம்” என்று ஒரு புதிய தகவலை கூறியுள்ளார் பஹத் பாசில்