புதுடெல்லி: ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் தமிழகத்தில் 28 லட்சத்து 48 ஆயிரம் ஊரகப்பகுதி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய இணையமைச்சர் பிரஹலாத் சிங் படேல் மக்களவையில் வியாழக்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியது: ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் கடந்த 35 மாதங்களில் ஊரகப்பகுதிகளில் உள்ள 34 சதவீத வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் 2024 -ம் ஆண்டிற்குள் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஜல்ஜீவன் இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த இயக்கம் அறிவிக்கப்பட்ட போது இருந்த 18.93 கோடி ஊரகப்பகுதி வீடுகளில் கடந்த 35 மாதங்களில் 6.57 கோடி வீடுகளுக்கு (34.32%) குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டில் மொத்தமுள்ள 19.15 கோடி வீடுகளில் 9.81 கோடி வீடுகளுக்கு (51.22%) குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 19 லட்சத்து 15 ஆயிரம் ஊரகப்பகுதி வீடுகளில் இதுவரை 9 லட்சத்து 80 ஆயிரம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டு செயல்திட்டத்தின்படி, தமிழகத்தில் 28 லட்சத்து 48 ஆயிரம் ஊரகப்பகுதி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.