ரூ 1.8 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தல்| Dinamalar

இந்திய நிகழ்வுகள்

இந்தியாவுக்கு எதிராக ‘ஜிகாத்’பீஹாரில் இளைஞர் கைது

புதுடில்லி-இந்தியாவுக்கு எதிரான வெறுப்புணர்வை இளைஞர்களிடம் பரப்பிய குற்றச்சாட்டில், பீஹாரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தடை செய்யப்பட்ட ஜமாத் – உல் – முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த ஆறு பேர், கடந்த மார்ச்சில் கைது செய்யப்பட்டனர். இதில் மூவர் வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்கு வந்தவர்கள். இதையடுத்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு இவர்கள் மீது, ‘ஜிகாத்’ என்ற பெயரில், இந்தியாவுக்கு எதிராக இளைஞர்களிடம் வெறுப்புணர்வை துாண்டியதாக வழக்கு பதிவு செய்துள்ளது.

இது குறித்து என்.ஐ.ஏ.,வின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:கைது செய்யப்பட்டவர்களுக்கு, பீஹாரின் சிஸ்வனியா கிராமத்தில் உள்ள ஜமாத் – உல் – முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த அலி அஸ்கர் என்பவருடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. தீவிர மதவாதியான அலி அஸ்கர், சமூக வலைதளங்கள் வாயிலாக இந்தியாவுக்கு எதிராக இளைஞர்களிடம் வெறுப்புணர்வு பிரசாரம் செய்து வந்துள்ளார். இதையடுத்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் சம்பரன் பகுதியில் அதிரடி சோதனை நடத்தி, அங்கு பதுங்கியிருந்த அலி அஸ்கரை கைது செய்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.

உள்ளாடை அகற்றல் விவகாரம்கேரளாவில் மேலும் இருவர் கைது

கொல்லம்-கேரளாவில், ‘நீட்’ தேர்வின்போது, மாணவியரின் உள்ளாடைகளை அகற்றக் கூறிய விவகாரம் தொடர்பாக, மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த 17ல் நாடு முழுதும் நடைபெற்றது.இதில், கேரளாவின் கொல்லத்தில் உள்ள ஆயூர் தேர்வு மையத்தில் நீட் எழுத வந்த மாணவியரை உள்ளாடைகளை கழற்றிவிட்டு வந்தால் மட்டுமே எழுத அனுமதிக்க முடியும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.மாணவியரும் வேறு வழியின்றி உள்ளாடைகளை கழற்றிவிட்டு தேர்வெழுதியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், தேசிய தேர்வு முகமை பணியாளர்கள் மூவர், கல்லுாரி ஊழியர்கள் இருவர் என, ஐந்து பெண்கள் கடந்த 19ல் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக, நீட் பார்வையாளர் மற்றும் தேர்வு ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

latest tamil news

தமிழகத்தைச் சேர்ந்தவர் திருமலையில் படுகொலை

திருப்பதி–திருமலையில் உள்ள அருங்காட்சியகம் பகுதியில், ஆரணியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருமலை ஏழுமலையான் கோவில் பின்புறம் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா அருங்காட்சியகம் எதிரே அடையாளம் தெரியாத ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பக்தர்கள் சிலர் நேற்று போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருமலை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில், கொலையானது திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கந்தசாமி என்பது தெரிய வந்தது.அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவின் அடிப்படையில், 2 மணி நேரத்தில் போலீசார் கொலையாளியையும் கைது செய்தனர். அவர் குடியாத்தத்தைச் சேர்ந்த பாஸ்கர் என தெரிய வந்துள்ளது. ‘பாஸ்கரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விரைவில் கொலைக்கான காரணம் தெரிய வரும்’ என திருமலை போலீசார் கூறினர்.

மனைவியை மின் கம்பத்தில்கட்டி வைத்து தாக்கிய கணவர்

ஆக்ரா-உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் பெண் ஒருவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவத்தின் ‘வீடியோ’ வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி.,யில் முதல்வர்யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்கு, ஆக்ராவில் உள்ள அர்சேனா கிராமத்தைச் சேர்ந்த ஷ்யாம்பிகாரிக்கும், அவரது மனைவி குஷ்மா தேவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், குஷ்மா தேவியை மின் கம்பத்தில் கட்டி வைத்து அவரது கணவர் கண்மூடித்தனமாக தாக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. இது குறித்து, சிக்கந்த்ரா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் குமார் ஷாஹி கூறியதாவது:கடந்த 14ல், ஷ்யாம்பிகாரிக்கும், குஷ்மா தேவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில், குஷ்மா தேவி தாக்கப்பட்டார். இது குறித்து, குஷ்மா தேவி போலீசில் புகார் அளிக்க முயன்றுள்ளார்.இதை அறிந்த குஷ்மாவின் கணவரும், மாமியாரும் அவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இந்த சம்பவத்தை அருகே இருந்தவர்கள் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.இதையடுத்து, ஷ்யாம்பிகாரி மற்றும் அவரது தாய் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து உள்ளோம். இருவரும் தலைமறைவாகி விட்டனர்; அவர்களை தேடி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக நிகழ்வுகள்

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு

திருப்பூர்:விவசாயியின் வீட்டில், நகை மற்றும் பணத்தை திருடி சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.தாராபுரம், பொன்னபுரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 50; விவசாயி. அப்பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டுக்கு இரவு நேரத்தில் சென்று விடுவர். பின், மறுநாள் காலை திரும்புவர்.கடந்த, 19ம் தேதி இரவு வழக்கம் போல் குடும்பத்துடன் தோட்டத்து வீட்டுக்கு சென்றனர். காலையில் திரும்பிய போது, வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவை உடைத்து, உள்ளே இருந்த, 8.5 சவரன் நகை, 80 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. அப்பகுதியில் உள்ள ‘சிசிடிவி’ கேமராக்களை பார்வையிட்டு தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.தொடர் திருட்டுதாராபுரம் பகுதியில் சமீப காலமாக திருட்டு, வழிப்பறி, நகைப்பறிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு மின்வாரிய அதிகாரியின் வீட்டில் நகை, பணம், வெள்ளி பொருட்கள் திருடு போனது. தற்போது, விவசாயி வீட்டில் திருடு போயுள்ளது.இரண்டு வீடுகளை, திருட்டு கும்பல் நோட்டமிட்டு, வீட்டில் இல்லாத போது கைவரிசை காட்டி வருகின்றனர். வழிப்பறி, நகைபறிப்பு போன்ற சம்பவம் அடிக்கடி நடக்கிறது. எனவே, தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கஞ்சா விற்றவர்கள் கைது

வாடிப்பட்டி,-அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., உதயகுமார் மற்றும் போலீசார் கஞ்சா விற்ற ராமநாயக்கன்பட்டி ஆறுமுகம், செல்லையாவை 27, கைது செய்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சா, ரூ.10,200 மற்றும் 2 அலைபேசிகளை பறிமுதல் செய்தனர்.

அடுத்தடுத்து மறியல்; பா.ஜ.,வினர் கைது

மேலுார்-விருதுநகரில் மத்திய அரசு நிதியில் கைத்தறி ஜவுளி பூங்கா அமைக்க வலியுறுத்தி சிவகாசியில்இருந்து விருதுநகருக்கு நடைபயணம் மேற்கொண்ட பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன், மதுரை மாவட்ட செயலாளர் மகா சுசீந்திரன்உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.இதை கண்டித்து மேலுாரில் நகர் தலைவர் சேவுகமூர்த்தி தலைமையில் மறியல் நடந்தது. மாவட்ட செயலாளர்கள் ஆனந்தஜெயம், ராஜா, துணைத்தலைவர் பாலன், ஆன்மிக பிரிவு தலைவர் தர்மலிங்கம், மகளிரணி தலைவி மஞ்சுளா, நகர் செயலாளர் இளமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களை இன்ஸ்பெக்டர் சார்லஸ் கைது செய்தார்.

உசிலம்பட்டி
மதுரை ரோட்டில் மாவட்ட துணைத் தலைவர் சொக்கநாதன், பொதுச் செயலாளர் மொக்கராஜ், ஒன்றிய நிர்வாகிகள் கருப்பையா, சின்னச்சாமி, பாக்கியராஜ், நகர் செயலாளர் முத்தையா மறியலில் ஈடுபட்டனர். 15 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

திருமங்கலம்
தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தமூர்த்தி, செயலாளர் சின்னச்சாமி, வழக்கறிஞர் பிரிவு தலைவர் கிருஷ்ணன் தலைமையில் மறியல் நடந்தது. நகர் தலைவர் தமிழ்மணி, ஒன்றிய தலைவர்கள் சரவணன், பாலமுருகன், சுரேஷ்குமார், சரவணன், சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாணவி கர்ப்பம்: மாணவர் மீது வழக்கு

திருவள்ளூர்:பத்தாம் வகுப்பு மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கியதாக இரு மாணவர்கள் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

திருவள்ளூர் நகரைச் சேர்ந்த 15 வயது மாணவி, தனியார் பள்ளியில், 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில், வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த, பிளஸ் 1 மாணவர்கள் இருவர், இவருடன் பேசி பழகி உள்ளனர்.கடந்த ஜனவரி மாதம், அவரை, மாணவர்கள் இருவரும், வேப்பம்பட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

பின், வீட்டில் யாருமில்லாத நேரத்தில், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துஉள்ளனர். இதில், மாணவி, கர்ப்பமானார். இந்த தகவலை கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், புகார் செய்தனர்.அதன்படி, மாணவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

வெளிநாட்டில் இருந்து கடத்தல்: ரூ 1.82 கோடி தங்கம் பறிமுதல்

சென்னை:ஆசனவாயில் மறைத்து கடத்தி வரப்பட்ட 1.82 கோடி ரூபாய் மதிப்பிலான 4.15 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் விமானம் நேற்றுமுன்தினம் சென்னை வந்தது. அதில் இருந்து வந்த இரண்டு பயணியர் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றனர். அவர்களை மறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது தங்க பசையுள்ள ஆறு பொட்டலங்கள் ஆசனவாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

அவற்றை வெளியே எடுத்து மதிப்பிட்டதில் 1.13 கோடி ரூபாய் மதிப்பிலான 2.58 கிலோ தங்கம் இருந்தது தெரிய வந்தது.இதே போல துபாயில் இருந்து சென்னை வந்த எமிரேட்ஸ் விமானத்தில் வந்த இரு பயணியரை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது தங்கபசை அடங்கிய நான்கு பொட்டலங்கள் ஆசனவாயில் மறைத்து வைக்கப் பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவற்றை வெளியே எடுத்து மதிப்பிட்டதில் 69.30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.57 கிலோ தங்கம் இருந்தது தெரிய வந்தது.மொத்தம் 1.82 கோடி ரூபாய் மதிப்பிலான 4.15 கிலோ தங்கத்தையும் 18.15 லட்சம் ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நான்கு பயணியரையும் கைது செய்து சுங்கத் துறை புலனாய்வு அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

தலைமையாசிரியருக்கு மிரட்டல்: உறவினருக்கு போலீஸ் வலை

கோவை:பீளமேடு தனியார் பள்ளி தலைமையாசிரியரை மிரட்டியது தொடர்பாக, அவரது உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.கோவை பீளமேடு தனியார் பள்ளியில், தலைமையாசிரியராக பணியாற்றுபவர் ரம்யா, 36. என்.ஆர்.ஐ., கார்டன் புவனா டைமண்ட் ஹில் அபார்ட்மென்ட் வீட்டில் வசிக்கிறார். இவரது கணவர் நான்கு மாதங்களுக்கு முன் இறந்து விட்டார்.அவர் பெட்ரோல் பங்க் உரிமம் வாங்கியதற்காக, 6 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று உறவினரான மதனேஸ்வரன் கூறியுள்ளார். அந்த பணத்தை தர வலியுறுத்திய அவர், வீட்டில் இருந்த தலைமையாசிரியர் ரம்யாவை மிரட்டியுள்ளார்.ரம்யா கொடுத்த புகார்படி, அத்துமீறி வீட்டினுள் புகுதல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய சட்டப்பிரிவுகளில், மதனேஸ்வரன் மீது பீளமேடு போலீஸ் எஸ்.ஐ., பேச்சிமுத்து வழக்கு பதிந்தார். எஸ்.ஐ., ரஜினிகாந்த் விசாரணை நடத்தி வருகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.