பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தில் சமூகத் தணிக்கை கட்டாயம்: மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: “பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தில் சமூகத் தணிக்கை செய்யப்படுவது கட்டாயம்” என மக்களவையில் மத்திய இணை அமைச்சர் கவுசல் கிஷோர் பதிலளித்துள்ளார்.

திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி எம்.பியான கனிமொழி எழுப்பியக் கேள்வியில், ”மத்திய அரசு நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கான நிதி வேறு திட்டங்களுக்கு மடை மாற்றப்படுகிறதா?

இத்திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி சமூகத் தணிக்கை நடத்தப்பட்டிருக்கிறதா? அவ்வாறு ஆய்வு செய்திருந்தால் ஒவ்வொரு மாநிலத்திலும் இத்திட்டத்தின் செயல்பாடுகளைப் பற்றிய விவரங்களை வெளியிடவும். அவ்வாறு சமூகத் தணிக்கை செய்யப்படவில்லை என்றால் அத காரணம் என்ன?” எனக் கேட்டிருந்தார்.

இந்தக் கேள்விகளுக்கு மத்திய நகர்ப்புற வீட்டு வசதித்துறை இணை அமைச்சர் கவுஷல் கிஷோர் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், ”மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் சார்பில் பிரதம மந்திரியின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டம் கடந்த 2015-ஆம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது. தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் அடிப்படை வசதிகளைக் கொண்ட எந்த காலநிலைக்கும் பாதிக்கப்படாத வகையில் வீடுகள் கட்டித் தரப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி வீடு கட்டுவதற்கான மூன்றாவது தவணை நிதி விடுவிக்கப்படுவதற்கு முன் இத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை அறிய சமூகத் தணிக்கை செய்யப்படுவது கட்டாயமாகும். இந்த சமூகத் தணிக்கை மூலமாக இந்தத் திட்டத்தின் நடைமுறை மற்றும் பலன்கள் உரிய வகையில் பயனாளிகளுக்கு சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க முடிகிறது.

மேலும், சமூகத் தணிக்கையானது இத்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்துதல், அதிகாரிகள் மற்றும் பயனாளிகளின் பொறுப்புத் தன்மையை உறுதி செய்தல், வெளிப்படைத் தன்மை ஆகியவற்றில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் சமூக தணிக்கை பற்றிய விவரங்கள் https://www.mohua.gov.in/upload/uploadfiles/files/7PMAY_Social_Audit_Guidelines_2017$2017Apr25181455.pdf என்ற இணைய முகவரியில் காணக் கிடைக்கின்றன. சமூகத் தணிக்கை செய்வதற்காக மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு இத்திட்டத்தில் இருந்து மத்திய அரசு முழு நிதியுதவி செய்கிறது.

இதுவரை பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு, ஆந்திரா, அருணாசலப்பிரதேசம், அஸ்ஸாம், பிகார், சத்தீஸ்கர், குஜராத், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ஒடிசா, புதுச்சேரி, திரிபுரா, உத்திரப் பிரதேசம், உத்தராகண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு சமூகத் தணிக்கை செய்வதற்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.