திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டு முழுவதும் நடைபெறக்கூடிய பூஜைகள், அர்ச்சனைகள், உற்சவம் நேரங்களில் பக்தர்கள் மூலமாகவோ அல்லது பணியாளர்கள் மூலமாக தெரிந்தோ தெரியாமலோ ஏற்படக்கூடிய தோஷங்களுக்கு பரிகாரமாக ஒவ்வொரு ஆண்டும் பவித்ர உற்சவம் மூன்று நாட்களுக்கு நடத்தப்படுகிறது. மூன்று நாட்கள் நடைபெறக்கூடிய பவித்ர உற்சவத்தில் காலை 9 மணி முதல் 11 மணி வரை சுவாமி- தாயார் உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட உள்ளது. மாலை 6 மணி முதல் 7 மணி வரை சிறப்பு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு தேவி- பூதேவி சமேத மலையப்பசுவாமி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். அதன்படி வருகிற ஆகஸ்ட் 8ம் தேதி பவித்ர மாலைகள் பிரதிஷ்டையும், 9ம் தேதி பவித்ர மாலைகள் சமர்ப்பணம், 10ம் தேதி யாகம் பூர்ணாஹுதியுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி 7ம் தேதி அங்குரார்பணத்தையொட்டி சகஸ்கர தீப அலங்கார சேவையும், 9ம் தேதி அஷ்டதளபாத பத்ம ஆராதனை சேவையும், 8ம் தேதி முதல் 10 ம் தேதி வரை கல்யாண உற்சவம், டோல் உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளதாக நேற்று திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.