தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை அதிகரிக்க வலியுறுத்தல்!| Dinamalar

புதுச்சேரி: தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., படிப்பில், அரசு ஒதுக்கீட்டு இடங்களை கடந்தாண்டைவிட கூடுதலாக வழங்க வேண்டும் என, முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

புதுச்சேரி மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லுாரி மட்டுமின்றி, மணக்குள விநாயகர், பிம்ஸ், வெங்கடேஸ்வரா உள்ளிட்ட தனியார் மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன.இக்கல்லுாரிகள் ஆண்டுதோறும் அரசுக்கு குறிப்பிட்ட சதவீத இடங்களை வழங்கி வருகின்றன. இவ்வாறு பெறப்படும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ‘சென்டாக்’ மூலம் நிரப்பப் பட்டு வருகிறது.

இந்த கல்வியாண்டிற்கான ‘நீட்’ அல்லாத படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த 8ம் தேதி முதல் சென்டாக் இணைய தளத்தில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., உள்ளிட்ட ‘நீட்’ மதிப்பெண் அடிப்படையிலான படிப்புகளுக்கும் விரைவில் விண்ணப்பம் விநியோகிக்கப்பட உள்ளது.

கூடுதல் சீட்

இச்சூழ்நிலையில் புதுச்சேரியில் உள்ள மூன்று தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் அரசு இட ஒதுக்கீட்டு இடங்களை முடிவு செய்வதற்கான ஆலோசனை கூட்டம், முதல்வர் ரங்கசாமி தலைமையில் சட்டசபை வளாகத்தில் நேற்று நடந்தது.

இக் கூட்டத்தில் கலெக்டர் வல்லவன், அரசு செயலர்கள் உதயகுமார், நெடுஞ்செழியன், சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இதில், கடந்தாண்டை காட்டிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்களை தர வேண்டும் என அரசு தரப்பில், தனியார் கல்லுாரி பிரதிநிதிகளிடம் வலியுறுத்தப் பட்டது.குறிப்பாக, கடந்தாண்டை காட்டிலும் 6 எம்.பி.பி.எஸ்.. சீட்டுகள் வரையாவது அதிகரித்து, மொத்தம் 176 இடங்களை இந்தாண்டு அரசுக்கு தர வேண்டும் என அரசு வலியுறுத்தியது.

latest tamil news

கட்டணம் உயர்த்த கோரிக்கை

கல்லுாரி தரப்பினர், ‘எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் கடந்தாண்டே முடிந்தது. கொரோனா காரணமாக கல்விக் கட்டணத்தை உயர்த்த அரசு அனுமதிக்கவில்லை. இதனால் நிர்வாக செலவுகளை சமாளிக்க முடியாமல் உள்ளோம். எனவே கல்விக் கட்டணத்தை உயர்த்த வேண்டும்’ என தெரிவித்தனர்.

மேலும், அரசுக்கு கூடுதல் இடங்களை வழங்குவது தொடர்பாக கலந்து ஆலோசித்து முடிவினை தெரிவிப்பதாகவும் கூறினர். அதனால் இக்கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. எனவே விரைவில் அடுத்த கூட்டம் கூட்டப்பட உள்ளது.

எத்தனை ‘சீட்’

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரியில் மொத்தமுள்ள 180 எம்.பி.பி.எஸ்., சீட்டுகளில் 131 சீட்டுகள் அரசு ஒதுக்கீடாக நிரப்பப்படுகிறது.கடந்தாண்டு (2021-22) பிம்ஸ், மணக்குள விநாயகர் ஆகிய இரு மருத்துவக் கல்லுாரிகள் தலா 56 இடங்களும், வெங்கடேஸ்வரா கல்லுாரி 58 இடங்கள் என மொத்தம் 170 எம்.பி.பி.எஸ்., சீட்டுகளை அரசுக்கு வழங்கின.

அதற்கு முந்தைய ஆண்டு (2020-21) இந்த மூன்று தனியார் கல்லுாரிகளில் மொத்தமுள்ள 450 எம்.பி.பி.எஸ்., சீட்டுகளில் தலா 55 சீட்டுகள் வீதம் 165 சீட்டுகளே அரசுக்கு வழங்கப்பட்டது.இந்த ஆண்டு அரசின் கோரிக்கையை ஏற்று கூடுதல் இடங்கள் கிடைக்குமா அல்லது கடந்தாண்டு வழங்கிய இடங்களே வழங்கப்படுமா என்பது அடுத்த கூட்டத்தில் தெரிய வரும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.