கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி மற்றும் முதல்வர் சிவசங்கரன், இரண்டு ஆசிரியைகள் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே மாணவி மரணம் குறித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தனியார் பள்ளி வளாகத்தில் இயங்கும் விடுதிக்கு உரிமம் இல்லை என்று தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் பதிவேடுகளை ஆய்வு செய்த கமிஷன் குழு, பள்ளி நிர்வாகம்’ விடுதி நடத்த உரிமம் பெறவில்லை என தெரிவித்தனர். விடுதியில் சுமார் 83 மாணவர்களும் 24 மாணவிகளும் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜூலை 17 அன்று நடந்த வன்முறையில், 3வது மாடியில் உள்ள விடுதியும், பள்ளி வளாகத்திற்குப் பின்னால் அமைந்துள்ள மற்றொரு விடுதியும் குறிவைக்கப்பட்டு, பெட்ஷீட்கள் மற்றும் கட்டில்கள் எரிக்கப்பட்டன.
இந்த புகாரின் பேரில், தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, உறுப்பினர்கள் சரண்யா ஜெயக்குமார், துரைராஜ், முரளி ஆகியோர் அடங்கிய கமிஷன் குழுவினர், கலெக்டர் ஸ்ரவன் குமார் ஜாதவத், முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் சிவராமன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரி இளையராஜா, ஜூலை 14 அன்று மாணவி இறந்துவிட்டதாக அறிவித்த அரசு மருத்துவமனை மருத்துவர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவரும் உடனிருந்தார். கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பதிவேடுகளை ஆய்வு செய்த குழுவினர், விடுதியை நடத்த தேவையான உரிமத்தை நிர்வாகம் வாங்கவில்லை என்பதை உறுதி செய்தனர். விடுதி கட்டடத்துக்கு சீல் வைப்போம் என கமிஷன் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி கூறினார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு கள்ளக்குறிச்சி கலெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஸ்ரவன் குமார் ஜாதவத், பொறுப்பேற்ற உடனேயே பள்ளிக்கு நேரில் சென்று இடங்களை ஆய்வு செய்தார்.
மேலும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) உறுப்பினர்கள் ஜூலை 27 அன்று பள்ளியை ஆய்வு செய்கின்றனர்.
இதற்கிடையில், பிரேத பரிசோதனை குழுவில் தங்கள் தரப்பு மருத்துவரையும் நியமிக்க கோரி, மாணவியின் தந்தை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“