“இபிஎஸ் – ஓபிஎஸ் இடையேயான பிரிவு, அண்ணன் தம்பி பிரிவு போன்றது”– செல்லூர் ராஜூ பேச்சு

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று செய்தியாளர் சந்திப்பொன்றின் போது, “அதிமுகவில் இருந்து ஒரு தொண்டர் கூட பிரிந்து செல்லக் கூடாது. இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் இடையேயான பிரிவு அண்ணன் – தம்பி பிரிவு போன்றது” என பேசியுள்ளார்.
மதுரை சிக்கந்தர் சாவடி, கோவில்பாப்பாகுடி பகுதிகளில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, பள்ளி கட்டிட பணிகளுக்கான பூமி பூஜை செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக அமைப்புச் செயலாளர் செல்லூர் ராஜூ, நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, “தேர்தல் நேரத்தில் இந்து மதத்தை நேசிப்பது போல திமுகவினர் செயல்படுவார்கள். தர்மபுரி எம்.பி. பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளரை பொது இடத்தில் இங்கிதம் இல்லாமல் திட்டியுள்ளார். இதனை கண்டிக்காத தமிழக முதல்வரின் செயல் கண்டிக்கத்தக்கது.
image
ஒன்றரை ஆண்டுகளில் சிறுபான்மை மக்களுக்கு இந்த அரசு எதுவும் செய்யவில்லை. ஆன்மீக சுற்றுலா என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் வேலையை தான் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்கள் பாஜகவை விட, திமுக மீது கடும் வெறுப்பில் உள்ளனர். அதிமுகவிற்கு வாக்களிக்க எப்பொழுது தேர்தல் வரும் என மக்கள் எதிர்நோக்கி காத்துக் கொண்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் வாக்கு கேட்டு போகப்போவதில்லை. திமுக மீதுள்ள வெறுப்பில் மக்களே எங்களுக்கு வாக்குகளை செலுத்தி விடுவார்கள். 
ஜி.எஸ்.டி வேண்டாம் என சொல்லிவிட்டு பால், தயிர், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கு வரி கேட்டு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கூட்டணி என்பது நிரந்தரமானது அல்ல. அந்த வகையில் பாஜக-வோடு கூட்டணியை தொடர்வது குறித்து தேர்தல் நேரத்தில் அதிமுக தலைமை முடிவெடுக்கும்” என்றார்.
image
தொடர்ந்து இபிஎஸ் – ஓபிஎஸ் பிரிவு குறித்து அவர் பேசுகையில், “இரட்டை குதிரையில் சவாரி செய்வது முடியாத ஒன்று. ஒற்றை மனிதரின் அதிகாரத்தில் கட்சியை கொண்டு வந்துள்ளோம்” என்றார். அப்போது அவரிடம் “ஒபிஎஸ்-ஐ மீண்டும் கட்சியில் ஏற்று கொள்வீர்களா?” என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ, “ஒரு தொண்டன் கூட கட்சியில் இருந்து செல்லக் கூடாது என்பதே எங்கள் விருப்பம். காளிமுத்து, ஆர்.எம்.வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன் எல்லோரும் தவறு செய்து விட்டு மன்னிப்பு கேட்டு திரும்பியவர்கள் தான். அந்தவகையில், எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் பிரிவும் அண்ணன் தம்பி போராட்டம் தான். ஆகவே ஓ.பன்னீர்செல்வம் மனம் திருந்தி வந்தால் நிச்சயம் ஏற்போம். பொதுச்செயலாளர் தலைமையை ஏற்று யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “பிரதமரின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இந்தியா ஒரு வல்லரசு நாடாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அப்துல் கலாமின் கனவை நோக்கி பாஜக அரசு முன்னேறிச் செல்கிறது. எனவே மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக வர வேண்டும்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.