சீமான், எப்போதும் தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை மீட்டெடுப்பது, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவது, இயற்கை வேளாண்மை என மிகவும் உணர்ச்சிகரமாக பேசக்கூடியவர்.
தனது அரசியல் கட்சியை மேலும் வலுவாக்க, `சுற்றுச்சூழல் பாசறை’ என்ற அமைப்பை தொடங்கி மரம் நடுதல், கண்மாய் தூர்வாருதல், பனைவிதை சேகரித்தல் எனச் சூழல் பணிகளையும் முன்னெடுத்து வருகிறார்.
இந்நிலையில், செய்யாறு பிரம்மதேசம் கிராமத்தில் உள்ள ராஜேந்திர சோழன் கோவிலில், நாம் தமிழர் கட்சி சார்பாக, வியாழக்கிழமை ராஜேந்திர சோழன் பெருவிழா நடத்தப்பட்டது.
கூட்டத்தில் பேசிய சீமான், சோழர்கள் கட்டிய கோவில் என்பது நம் வரலாற்று ஆவணம். இதை சாதாரண கோவில்களாக கருத வேண்டாம். நாம் எப்படி எல்லாம் வாழ்ந்து இருக்கிறோம் என்பதற்கான ஆதாரங்கள் இவை. நாம் இதை கண்டு பெருமை கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக, அங்கு கூட்டம் தொடங்கும் முன், கட்சி நிர்வாகிகள் பறை அடித்து உள்ளனர். இதை அங்கிருந்த மாற்று சாதியினர் சிலர் எதிர்த்ததாக கூறப்படுகிறது.
அதையும் மீறி பறை அடித்ததால், ஆத்திரமடைந்த சிலர், நாம் தமிழர் கட்சி கொடியை இறக்கியதாகவும், அங்கிருந்த வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதை மேடையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சீமான், ஹே அடங்க மாட்டீங்களா? யார் அவன் கொடியை இறக்கிறது? இங்க வர சொல்லு என்று சத்தமாக பேசியவாறு, தொலைச்சு புடுவேன் பாத்துக்கோ என்றார்.
அவரை கட்சி நிர்வாகிகள் அமைதிப்படுத்தினர். பிறகு பேசிய சீமான், நான் பறை அடிப்பது உனக்கு பிரச்னையா? பறை நம்முடைய இசை. நான் பறைதானே அடிச்சேன். உன்னை அடிக்கலேயே. நான் தனிச்சு நிற்கிறேன் வா. இது உன் கோட்டை என்றால்.. தமிழ்நாடே என் கோட்டை என்று கோவத்துடன் பேசினார்.
அவர் இப்படி பேசிய வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“