புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிக்கும் திரிணமூல் காங்கிரஸின் முடிவை விமர்சித்துள்ள எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மார்கரெட் ஆல்வா, இது ஈகோ அல்லது கோபத்திற்கான நேரம் அல்ல என்று கூறியுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ஆளும் பாஜக சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்வரும், எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர். இதில் ஜெகதீப் தன்வர், மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் தீவிர ரசிகர் என்று கூறப்படுகிறது. அதனால், மார்கரெட் ஆல்வா வேட்பு மனு தாக்கல் செய்த போது திரிணமூல் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. இதனால் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜெகதீப் தன்வருக்கு மம்தா ஆதரவளிப்பார் என்று கணிக்கப்பட்டது. மம்தா பானர்ஜியின் மருமகனும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஜித்பானர்ஜி நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் இரு வேட்பாளர்களில் யாருக்கும் ஆதரவளிப்பதில்லை என கட்சி ஒருமனதாக முடிவு செய்துள்ளது. பாஜக கூட்டணி வேட்பாளரை ஆதரிப்பது குறித்த கேள்வியே எழவில்லை. இரு அவைகளிலும் 35 எம்.பி.க்கள் உள்ள ஒரு கட்சியுடன் முறையான ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் இல்லாமல் எதிர்க்கட்சி வேட்பாளரை முடிவு செய்த விதம் காரணமாக வாக்கெடுப்பில் இருந்து விலகி யிருக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்” என்றார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முடிவை மார்க்ரேட் ஆல்வா கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதில் இருந்து விலகிய திரிணாமுல் காங்கிரஸின் முடிவு ஏமாற்றமளிக்கிறது. இது ‘வாட்பவுட்டரி. ஈகோ அல்லது கோபத்திற்கான நேரம் அல்ல. இது தைரியம், தலைமை மற்றும் ஒற்றுமைக்கான நேரம் என நான் நம்புகிறேன், மம்தா பானர்ஜி, யார்? தைரியத்தின் உருவகம், எதிர்க்கட்சிகளுடன் நிற்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.