இந்தியாவின் 75-வது சுதந்திர தினம், ஆகஸ்ட் 15 அன்று நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பிரதமர் மோடியம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை நமது வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டும். அவ்வாறு கொடியை ஏற்றுவதன் மூலமாக மூவர்ணக் கொடி இயக்கத்தை வலிமைப்படுத்த முடியும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி பல்வேறு விவகாரங்களில் மத்திய பாஜக அரசை விமர்சித்திருக்கிறது. விமர்சனங்களுக்கு எதிராக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு காங்கிரஸைச் சாடியுள்ளார்.
தனியார் ஊடகத்திடம் பேசிய கிரண் ரிஜிஜு, “காங்கிரஸ் கட்சியிடம் எந்தவொரு அஜெண்டாவோ, செயல்திட்டமோ இல்லை. மேலும் அவர்களின் கையில் எந்த வேலையும் இல்லை.
அதனால்தான் தேச நலனுக்கு ஊறு விளைவிக்கும் விதமாகச் சம்பந்தமில்லாத பிரச்னைகளையெல்லாம் எழுப்புகிறார்கள். நாட்டில் தேசபக்தி அல்லது தேசியவாதத்தை வளர்க்கும் எந்தவொரு முயற்சி அல்லது நடவடிக்கைகளையும் அவர்கள் எப்போதும் நிராகரிப்பார்கள். அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் முற்றிலும் திவாலான கட்சி” எனக் கூறினார்.
முன்னதாக காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், பாஜகவின் சுதந்திர தின அறிவிப்புகளை, `பாசாங்குத்தன ஜிந்தாபாத்’ என்றும், `தேசியக் கொடியை உருவாக்கியவர்களின் வாழ்வாதாரத்தை அவர்கள் அழித்து வருகின்றனர்’ என்றும் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.