முப்படைகளில் நான்கு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன. பீகாரில் இருந்து தெலுங்கானா வரை ரயில்வே சொத்துக்கள் எரித்து சேதப்படுத்தப்பட்டன.
இதுதொடர்பாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அதில், “அக்னிபத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக ரயில் சேவைகள் ரத்தானதால் பயணிகளுக்கு வழங்கப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான தனி வரவு பராமரிக்கப்படவில்லை.
இருப்பினும், 14.6.2022 முதல் 30.6.2022 வரையில், அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது 2000 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாகவும், ரயில்வே சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதாலும் ரயில்வேக்கு ரூ.259.44 கோடி இழப்பு ஏற்பட்டது.
தோராயமாக, 102.96 கோடி ரூபாய் பயணிகளுக்கு திரும்பி அளிக்கப்பட்டது. அக்னிபத் திட்டத்தின் காரணமாக ரத்து செய்யப்பட்ட அனைத்து ரயில் சேவைகளும் மீட்டெக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.