திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக ஆக. 3ம் தேதி நேரில் ஆஜராகுமாறு கூறி சோனியா காந்திக்கு கொல்லம் மாவட்ட முன்சீப் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள குண்டரா பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்தவர் பிருத்விராஜ். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காசர்கோடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராஜ்மோகன் உண்ணித்தானுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்போது தேர்தல் நிதியில் ₹5 லட்சம் மோசடி செய்ததாக பிருத்விராஜ் மீது ராஜ்மோகன் உண்ணித்தான் காங்கிரஸ் தலைமைக்கு புகார் செய்தார். இதையடுத்து அவர் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இதை எதிர்த்து பிருத்விராஜ் கொல்லம் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கட்சி விதிகளை மீறி தன்னை சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும், எனவே தன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வாபஸ் பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இதை விசாரித்த நீதிமன்றம், ஆகஸ்ட் 3ம் தேதி நேரில் ஆஜராகுமாறு கூறி காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், கொல்லம் மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவி பிந்து கிருஷ்ணா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.