உலகம் தற்போது நான்காம் தொழிற்புரட்சிக் காலத்தில் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு, ரோபாடிக்ஸ், பொருட்களின் இணையம் (Internet of Things), மரபணுப் பொறியியல், குவாண்டம் கணினியியல், ஸ்மார்ட் சென்ஸார்கள், பெருந்தரவு (Big Data) உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களில் நிகழும் முன்னேற்றங்களின் கலவைதான் நான்காம் தொழிற்புரட்சி.
உலகில் இதற்கு முன் மூன்று தொழிற்புரட்சிகள் நிகழ்ந்துள்ளன. 18ஆம் நூற்றாண்டில் நீராவி இன்ஜின் கண்டுபிடிக்கப்பட்டதால், உற்பத்தி நடைமுறை இயந்திரமயமானது. நகர்மயமாக்கலும் அதிகரித்தது. இதுவே முதல் தொழிற்புரட்சி எனப்பட்டது.
19ஆம் நூற்றாண்டில் ரயில் போக்குவரத்து, மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டது உள்ளிட்ட அறிவியல் முன்னேற்றங்களால் ஒட்டுமொத்த உற்பத்தி பன்மடங்கு அதிகரித்தது. இதுவே இரண்டாம் தொழிற்புரட்சி என்று வரையறுக்கப்பட்டது.
20 ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் கணினி – டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் உற்பத்தி தானியங்கிமயம் அடையத் தொடங்கியது. வங்கியியல், ஆற்றல், தகவல்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. இதுவே மூன்றாம் தொழிற்புரட்சி என்று அறியப்பட்டது.
பயன்கள்
நீங்கள் பயணித்துக்கொண்டிருக்கும் கார் எந்தச் சாலை வழியாகச் சென்றால் குறைந்த நேரத்தில் இலக்கை அடையலாம் என்பதைக் கணித்துச் சொல்லும் ஜிபிஎஸ் அமைப்பு; நீங்கள் உண்ணும் உணவில் எத்தனை கலோரிகள் இருக்கின்றன, ஒரு நாளில் எத்தனை காலடிகள் நடந்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அணிந்திருக்கும் ஸ்மார்ட் கைக்கடிகாரத்திலிருந்தே தெரிந்துகொள்வது – இவை எல்லாமே இந்த நவீனத் தொழில்நுட்ப முன்னேற்றங்களால்தான் சாத்தியமாகியுள்ளன.
ஒரே இடத்திலிருந்தபடி உலகின் எந்த மூலையில் இருப்பவருடன் வேண்டுமானாலும் தொடர்புகொண்டுவிட முடியும் என்பதால், உலகளாவிய வணிக வலைப்பின்னல்கள் அனைவருக்கும் சாத்தியமாகியுள்ளன. உலகளாவிய வருமானத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் பன்மடங்கு அதிகரிப்பதற்கான சாத்தியங்களை நான்காம் தொழிற்புரட்சி உள்ளடக்கியிருக்கிறது.
பாதகங்கள்
நான்காம் தொழிற்புரட்சி கொண்டுவரும் வசதிகள் யாவும் டிஜிட்டல் உலகுடன் தம்மைத் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தவர்களுக்கு மட்டுமே பயனளிக்கின்றன. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளிலும் ஏழை நாடுகளிலும் திறன்பேசி, இணையம் உள்ளிட்ட எந்த வசதியையும் பயன்படுத்தாமல் டிஜிட்டல் உலகுக்கு வெளியே பெரும்பாலோர் இருக்கிறார்கள்.
நான்காம் தொழிற்புரட்சி கொண்டுவரும் மாற்றங்கள் யாவும் இந்த டிஜிட்டல் பிரிவினையை ஆழப்படுத்தி, அதன் விளைவாக சமத்துவமின்மையை அதிகரிக்கின்றன. மேலும், வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்திலும் ஊடுருவும் இணைய, டிஜிட்டல் கருவிகளால் தனிநபர்களின் அந்தரங்கம் மிகப் பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. மனிதர்கள் இடைவெளியில்லாமல் கண்காணிக்கப்படும் ஆபத்து பெரிதாகியிருக்கிறது.
தானியங்கிமயம் ஆதிகரித்துவருவதால் மனிதர்களுக்கான வேலைவாய்ப்பு குறைந்துவருகிறது. தானியங்கிமயத்தால் வேலைவாய்ப்பு குறையும் அதே வேளையில், புதிய தொழில்நுட்பங்களைக் கையாள்வதற்கான திறமைசாலிகளின் தேவையும் அதிகரிக்கிறது.
> இது, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க – டிஜிட்டல் சந்தா திட்டங்கள்