சென்னை: 2021-22-ம்ஆண்டில் தமிழகத்தில் 2,586 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்திய அளவில் அதிக குழந்தைகள் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகள் மற்றும் மாணவர்கள் தங்கிளின் கல்வியைத் தொடர முடியாத ஏற்பட்டது.
குறிப்பாக, சாலையோரம் வசிக்கும் குழந்தைகள் மற்றும் பொருளாதாராத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் ஆன்லைன் வகுப்புகளிலும் கலந்து கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கான சொல்போன்கைளை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதன் காரணமாக கரோனா ஊரடங்கு காலத்தில் உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக யூனிசெஃப் அமைப்பு கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், கரோனா காரணமாக குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 160 மில்லியன் ஆக உயரும் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த ஆண்டு அதிக குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 2021-22-ஆண்டில் மொத்தம் 13,271 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக பஞ்சாப்பில் 4867 பேரும், தமிழகத்தில் 2586 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
கரோனா தொற்று காலமான 2020-2021-ம் ஆண்டில் இந்தியாவில் 58,289 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.