வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம் : பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில், அடுத்தாண்டுக்குள் அனைத்து பள்ளிகளையும் இருபாலர் பள்ளிகளாக மாற்றும்படி, கேரள அரசுக்கு , அம்மாநில சிறார் உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவின் கொல்லத்தை சேர்ந்த ஐசக் பால் என்பவர் தாக்கல் செய்த மனுவை அடுத்து சிறார் ஆணையம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது. இருபாலர் பள்ளிகள் அமைப்பை அமல்படுத்துவது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள், மாணவிகளுக்கு என தனித்தனியே பள்ளிகள் இருப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். 2023-24ம் கல்வியாண்டு முதல் இருபாலர் பள்ளிகளை அமலுக்கு கொண்டு வர வேண்டுமென ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இருபாலர் திட்டத்தை அமல்படுத்துவதோடு, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சிறப்பாக இருக்க வேண்டும். பெற்றோர்களும், தங்கள் குழந்தைகளுக்கு இருபாலர் கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென கூறியுள்ளது.
சிறார் உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மனோஜ்குமார் கூறுகையில், அனைத்து பள்ளிகளையும், இருபாலர் பள்ளிகளாக மாற்றும்படி உத்தரவிட்டுள்ளோம். இதன் நோக்கம், அரசியலமைப்பு சட்டம் நமக்கு அளித்த சமத்துவத்தை காக்க வேண்டும். பாலின சமத்துவம் என்பது முக்கியமானது. இது பள்ளிகளில் இருந்து துவங்க வேண்டும். மேலும், பாலின சமத்துவமின்மையை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் பாடத்திட்டத்தில் இடம்பெறுவதை தவிர்க்க வேண்டுமென தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கேரள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கூறுகையில், ‘சிறார் உரிமை ஆணையத்தின் இருபாலர் பள்ளி தொடர்பான உத்தரவை நாங்களும் ஆதரிக்கிறோம். ஆனால் அதனை உடனடியாக அமல்படுத்த இயலாது.’ என்றார்.
கேரளாவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 280 பெண்கள் பள்ளிகளும், 164 ஆண்கள் பள்ளிகளும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement