வாஷிங்டன்: கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, சீன அதிபர் ஜி ஜின்பிங் வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, வெள்ளை மாளிகை வியாழக்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து அதிபர் ஜோ பைடன் தரப்பில், “எனக்கு கரோனாவின் லேசான அறிகுறிகள் உள்ளன. நான் நலமுடன் இருக்கிறேன். என்னை தனிமைப்படுத்திக் கொண்டு தொடர்ந்து பணிகளை செய்து வருகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜோ பைடனை, சீன அதிபர் ஜி ஜின்பிங் வீடியோ கால் மூலமாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்திருக்கிறார். அப்போது, “நீங்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்தார்.
தைவான், உக்ரைன் மற்றும் தொழில்நுட்பத் துறை போட்டி உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்கா – சீனா இடையேயான உறவு தொடர்ந்து மோசமடைந்து வருகின்றன. இந்த நிலையில், நான்கு மாதங்களுக்குப் பிறகு பைடன் – ஜி ஜின்பிங் இருவரும் வீடியோ கால் மூலம் பேசியுள்ளனர்.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் நடந்த வீடியோ கால் சந்திப்பில், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை சீனா ஆதரிப்பது குறித்து ஜி ஜின்பிங்கை ஜோ பைடன் கடுமையாக எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.