மதுரையில் உள்ள கட்டுமான நிறுவனங்களில் 3-வது நாளாக வருமானவரி சோதனை நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 75 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ரொக்கமும், 5 கோடி மதிப்பில் தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.
முருகன், ஜெயக்குமார், சரவணகுமார், செந்தில்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக இருந்து, மதுரையில் நடத்தி வரும் கிளாட்வே, ஜெயபாரத், அன்னை பாரத், கிளாட்வே கிரீன் சிட்டி ஆகிய கட்டுமான நிறுவனங்கள், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் குவித்தும், பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 20-ம் தேதி முதல், வருமான வரித்துறையினர் அந்நிறுவனத்துக்கு சொந்தமான 10 இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இங்கு மட்டுமின்றி, அரசு ஒப்பந்தராரான முருகவேல் என்பவருக்கு சொந்தமான ஆர்.ஆர். கட்டுமான நிறுவனத்தில் 2 நாட்கள் சோதனை நடத்தி, கோடிக்கணக்கில் ரொக்கம், தங்க நகைகள், சொத்து ஆவணங்களை கைப்பற்றினார்கள்.
இன்றும், 3-வது நாளான கிளாட்வே, அன்னை பாரத், ஜெய்பாரத், கிரீன் சிட்டி ஆகிய நிறுவனங்களில், வருமான வரித்துறையின் மண்டல புலனாய்வு உயரதிகாரி செந்தில்வேல் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்ததன் மூலம், பல வருடங்களாக வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்நிறுவனத்தின் பங்குதாரர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியும், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை மதிப்பிடும் பணியும் நடந்து வருகிறது. இந்த பணிக்காக, மதிப்பீட்டு குழுவினர் சென்னையில் இருந்து வந்துள்ளனர்.
பங்குதாரர் முருகன், ஜெயக்குமார் வீடுகளில் மட்டும், இதுவரை 75 கோடி ரூபாய் ரொக்கமாகவும் 20 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி வைர நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வாகனங்கள் மூலம் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
3-வது நாளாக தொடர்ந்து நடந்துவரும் இச்சோதனை, இன்றோடு முடியுமா அல்லது தொடருமா என்பது தெரியவில்லை. இதுவரை எவ்வளவு பணம், நகை, சொத்து ஆவணங்கள் கைப்பப்பற்றப்பட்டுள்ளன என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வருமான வரித்துறை விரைவில் வெளியிடும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.