புதுடெல்லி: பயணியுடன் வானில் பறக்கும் முதல் ட்ரோன் ‘வருணா’ தயாரிக்கப்பட்டுள்ளது. கப்பற் படைக்கான இக்கண்டுபிடிப்பை பிரதமர் நரேந்திர மோடி பார்வை யிட்டு தொடங்கி வைத்தார்.
கடந்த மே மாதம் டெல்லியில் நடந்த ட்ரோன் திருவிழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி தன் உரையில், ‘‘75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையில் ஒவ்வொருவரது கைகளிலும் ஸ்மார்ட் போன் அவசியம் என்பது எனது கனவு. ஒவ்வொரு பண்ணையிலும் ஒரு ட்ரோன் இருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் செல்வம் தழைத்தோங்க வேண்டும். ட்ரோன் தொழில்நுட்பத்தில் அதிகபட்ச மான கண்டுபிடிப்பு இந்தியாவில் இருக்கும்’’ எனக் குறிப்பிட்டார்.
இவரது கனவை மெய்ப்பிக்கும் வகையில் இந்தியாவில் முதன் முறையாக பயணியுடனான ட்ரோன் வருணா செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த 18-ம் தேதி இந்திய கப்பற்படை மற்றும் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பாளர்கள் சார்பில் டெல்லியில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியா வின் பயணியுடனான முதல் ட்ரோன் வருணாவை இயக்கி வைத்தார். இது, பிரதமரின் முன்பாக ஒரு பயணியுடன் வானில் பறந்து பிரச்சினையின்றி தரையிறங்கியது.
இந்த புதிய வகை ட்ரோன், சாகர் டிபன்ஸ் இன்ஜினீயரிங் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் கண்டு பிடிப்பாக உள்ளது. கடந்த 2015-ல் இதை நிறுவிய கேப்டன் நிகுன் பராஷர், இந்திய கப்பற்படையில் கேப்டனாகப் பணியாற்றியவர். பல அரசு விருதுகளும் பெற்ற இந்த நிறுவனம் சார்பில் விமானப்படை, கப்பற்படை ஆகியவற்றுக்கு உத வும் கருவிகள், உபகரணங்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த ட்ரோனில் விமானத்தை இயக்குபவர் போலான பைலட் தேவையில்லை. மற்ற ஆளில்லா விமானம் எனும் ட்ரோன்களைப் போலவே இதையும் இயக்கலாம். சுமார் 25 கி.மீ. பறக்கும் இந்த வருணா, 130 கிலோ எடையுடன் 25 முதல் 33 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் கொண்டது.
இதுகுறித்து, சாகர் டிபன்ஸ் ஸ்டார்ட் அப் நிறுவனர் கேப்டன் நிகுன்ஜ் பராஷர் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும் போது, ‘‘கப்பற்படைக்காக தயாரிக்கப் பட்டது இந்த ட்ரோன் வருணா. இதன் விசிறிகள் செயல்படாமல் முடங்கினாலும் அதில் அமைந்த 4 வகை தானியங்கி முறைகளால் பறப்பது தடைபடாது. தற்போ தைக்கு வானில் பறக்கும் வருணா, 3 மாதங்களுக்குப் பிறகு கடல் மட்டத்திற்கான வானில் பறக்கும். இதன்மூலம், ஒரு கப்ப லில் இருந்து மற்றொன்றுக்கு பொருட்கள், உடல்நலம் குன்றியவரை எளிதாக இடம்பெயர செய்யலாம்’’ என்றார்.
இந்த வகையிலான 30 வரு ணாக்கள் கப்பற்படையின் பயன்பாட்டுக்கு வர உள்ளன. இதற்கு கிடைக்கும் பலனைப் பொறுத்து, நாட்டின் மற்ற துறைகளி லும் பயன்பாட்டிற்கு வர உள்ளது. தற்போது வரை ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் என்றழைக்கப்படுகின்றன. இனி, அவை சிறியரக விமானங்கள் அல்லது வருணா என்ற பெயரில் அழைக்கப்படலாம்.