மதுரை: மதுரை மல்லிகைப்பூ திடீரென்று விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆடி முதல் வெள்ளி என்பதால் ரூ.500க்கு விற்ற மதுரை மல்லிகைப்பூவின் விலை இன்று திடீரென்று விலை கிலோ ரூ.1,200-க்கு உயர்ந்துள்ளது.
மதுரை மல்லிகைக்கு உள்ளூர் சந்தைகள் முதல் உலக சந்தைகள் வரை வரவேற்பு உண்டு. ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் உற்பத்தியாகும் மல்லிகைப்பூக்களுடைய மனமும், நிறமும் சிறப்பு மிக்கது.
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உற்பத்தியாகும் மல்லிகைப்பூக்களில் மதுரை மல்லிகையின் மனமும், நிறமும் இருக்காது. அதனாலே நறுமணப்பொருட்கள் தயாரிக்க உலக சந்தைகளுக்கு விமானங்கள் மூலம் மதுரையில் இருந்து மல்லிகைப்பூக்கள் ஏற்றுமதியாகிறது.
கரோனா காலத்தில் பூக்கள் தேவை குறைந்ததால் மதுரை மல்லிகைக்கும் வரவேற்பு இல்லாமல் போனது. அப்போது வீழ்ந்த மதுரை மல்லிகை உற்பத்தி தற்போது வரை இன்னும் எழுந்திருக்கவில்லை. அதனால், பூக்கள் வரத்து குறைந்து சந்தைகளில் மதுரை மல்லிகைக்கு இருந்த வரவேற்பும், விலையும் குறைந்தது.
திருவிழா காலங்களில் மட்டும் கிலோ ரூ.2 ஆயிரம் வரை உயர்ந்தது. மற்ற நாட்களில் கிலோ ரூ. 500 அளவிலே விற்பனையானது.
கடந்த சில மாதமாக ரூ.500 அளவில் விற்ற மதுரை மல்லிகை இப்போது மெள்ள விலை உயர ஆரம்பித்தது. கிலோ ரூ.1200 விலை என அதிகரித்தது. மழை என்பதால் பூக்கள் வரத்தும் சந்தையில் வீழ்ச்சியடைந்தது. வியாபாரிகள் கூறுகையில், ”மல்லிகை மட்டுமில்லாது அனைத்து பூக்கள் வரத்தும் தற்போது குறைந்துள்ளது. ஆனால், வரத்து குறைவால் விலையும் அதிகரிக்க வில்லை.
சமீப நாட்களாக திருவிழா காலங்கள், முகூர்த்த நாட்கள் இல்லாததால் பூக்கள் விலை குறைவாகவே இருந்தது. இந்நிலையில் திடீரென்று மல்லிகைப்பூ ரூ.1200 ஆக விலை உயர்ந்துள்ளது. சம்பங்கி ரூ.100, பட்டன் ரோஸ் ரூ.150, மரிக்கொழுந்து ரூ.80. முல்லை ரூ. 500, பிச்சிப்பூ ரூ.500 செண்டுமல்லி ரூ.50, அரளி ரூ.120 விபனையானது. மற்ற பூக்கள் விலை சுமாராக உள்ளது. ஆடிமுதல் வெள்ளி என்பதால் பூக்கள் விலை அதிகமாக உள்ளது” என்றார்.