வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மங்களூரு : கர்நாடகாவில் முத்த போட்டியில் பங்கேற்ற கல்லுாரி மாணவர்கள் எட்டு பேர் மீது, ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த மாணவர்கள், இரண்டு மாணவியரை கும்பலாக சேர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மங்களூரில் உள்ள பிரபல தனியார் கல்லுாரியில் படித்த மாணவர்கள் சிலர், மாணவியருடன் முத்த போட்டியில் ஈடுபட்டது தொடர்பான ‘வீடியோ’ சமீபத்தில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் கூறியதாவது:பிரபல கல்லுாரியைச் சேர்ந்த எட்டு மாணவர்களும், இரண்டு மாணவியரும், தனியார் குடியிருப்பு ஒன்றில் முத்தப் போட்டி நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் சில மாதங்களுக்கு முன் நடந்ததாக தெரிகிறது. அந்த வீடியோ சமீபத்தில் வெளியானது.
அதில், சீருடை அணிந்த ஒரு மாணவரை, ஒரு மாணவி உதட்டில் முத்தமிடுவது போன்ற காட்சி உள்ளது. அவர்களை சுற்றி மேலும் சில மாணவர்கள் உள்ளனர். இது குறித்து நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த எட்டு மாணவர்களும், இரண்டு மாணவியரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று, இதுபோன்ற பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். கும்பலாக சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, எட்டு மாணவர்கள் மீதும் ‘போக்சோ’ எனப்படும், பாலியல் தொல்லையில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்லுாரி நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும். இவ்வாறு போலீசார் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement