போலீஸ் போல நடித்து 8 சவரன் நகை அபேஸ் இன்றைய கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar

திருப்பூர் : தென்னம்பாளையம் காலனியை சேர்ந்தவர் பழனிசாமி; இவரது மனைவி வள்ளியம்மாள், 66. கணவர் இறந்ததால், தனியே வசித்து, பனியன் நிறுவனத்தில் செக்கிங் பிரிவில் பணிபுரிகிறார்.நேற்று காலை சந்தைபேட்டை செல்ல, வள்ளியம்மாள் வீட்டை விட்டு வெளியே வந்தார்.

அப்போது, பைக்கில் அங்கு வந்த இரண்டு மர்மநபர்கள் தங்களை போலீசார் என சொல்லி, ‘இந்த இடத்தில் நகை மற்றும் பணம் பறிப்புஅதிகம் நடக்கிறது. திருட்டு பயம் உள்ளதால், நகை அணிந்து வெளியே செல்லாதீர்கள்; நாங்கள் தரும் பர்ஸில் வைத்து, வீட்டுக்கு எடுத்து செல்லுங்கள்,’ என கூறியுள்ளனர்.அதனை நம்பிய வள்ளியம்மாள், தான் அணிந்திருந்த நான்கு பவுன் செயின் மற்றும் நான்கு பவுன் வளையலை அந்த ஆசாமிகளிடம் கழற்றி கொடுத்துள்ளார்.

நகைகளை வாங்கி, பர்ஸில் போடுவது போல் நடித்த ஆசாமிகள், பர்ஸை கொடுத்து, தப்பினர்.மூதாட்டி, வீட்டுக்கு சென்று பர்ஸை திறந்து பார்த்தபோது, அதில் கற்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே, தெற்கு போலீசில் புகார் அளித்தார். போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் நுாதனமுறையில் நகையை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர். இதற்காக, அப்பகுதியில், ‘சிசிடிவி’ கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

”டுபாக்கூர்’ சமூக சேவகி கைது

மாதவரம் : வங்கியில் கடன் வாங்கித் தருவதாக, பெண்ணை ஏமாற்றி நகை பறித்த, ‘டுபாக்கூர்’ சமூக சேவகி சிக்கினார்.சென்னை மாதவரம், பொன்னியம்மன்மேடு, மதுரை மணவாளன் நகரைச் சேர்ந்தவர் சந்துரு. இவரது மனைவி இந்து, 37; அதே பகுதியில் அழகு நிலையம் நடத்துகிறார்.சில நாட்களுக்கு முன் இவரது கடைக்கு சென்ற, பள்ளிக்கரணையைச் சேர்ந்த டெய்சி சின்னு, 39; என்பவர், தன்னை சமூக சேவகி என அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியுள்ளார்.

அத்துடன், தொழில் அபிவிருத்திக்கு வங்கியில் கடனுதவி பெற்றுக் கொடுப்பதாக கூறியுள்ளார்.அவரது பேச்சை நம்பிய இந்து, தன் அழகு நிலையத்தை மேம்படுத்த கடனுதவி பெற்றுத் தருமாறு கேட்டுள்ளார். உடனே, தயாராக வைத்திருந்த கடனுதவி மனுவை பூர்த்தி செய்தார். அதில், இந்துவின் போட்டோவை இணைக்க வேண்டுமென கூறி, போட்டோ எடுத்தார்.அதற்கு முன்னதாக, நகை அணிந்து இருப்பது போல் போட்டோ இணைத்தால், கடனுதவி கிடைக்காது என நம்ப வைத்து, இந்து அணிந்திருந்த இரண்டரை சவரன் நகையை கழற்றி, மேஜை டிராயரில் வைக்கும்படி கூறியுள்ளார்.

இந்து, நகையை டிராயரில் வைத்ததும், தொடர்ந்து பேச்சு கொடுத்து, டெய்சிசின்னு நகையை திருடிச் சென்றார். அவர் சென்ற பிறகு, நகை திருடு போனதை அறிந்த இந்து, மாதவரம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் விசாரித்ததில், பள்ளிக்கரணை, எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த டெய்சி சின்னு சிக்கினார்.

அவர், சிறு தொழில் செய்யும் பெண்களை குறி வைத்து, இதுபோன்ற மோசடியில் ஈடுபடுவது வழக்கம் என தெரிந்தது. புதுச்சேரியில் இதுபோன்று செய்து, பலரிடம் நகை திருடியதும் தெரிந்தது. நேற்று காலை அவரை கைது செய்த மாதவரம் போலீசார், இரண்டரை சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.

வீடு புகுந்து திருடியவருக்கு ‘தர்ம அடி’திண்டிவனம் அருகே பரபரப்பு

திண்டிவனம் : திண்டிவனம் அருகே, வீடு புகுந்து பாத்திரங்களை திருடியவரை பொது மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த சிறுநாங்கூர் ராயல் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம், 68; இவர், வீட்டை பூட்டிக்கொண்டு மன்னம்பூண்டியில் உள்ள மாமியார் வீட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை 3:00 மணியளவில், சண்முகம் வீட்டிலிருந்து மர்ம நபர் ஒருவர் பைக்கில் மூட்டையுடன் சென்றதைப் பார்த்த அப்பகுதி மக்கள், அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், சண்முகம் வீட்டில் பித்தளை பாத்திரங்களை திருடிச் சென்றது தெரியவந்தது. உடன் அப்பகுதி மக்கள் அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து வெள்ளிமேடுபேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.போலீஸ் விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட், பழங்குடி நகரைச் சேர்ந்த ரமேஷ், 45, என்பது தெரிய வந்தது. உடன் அவரை, சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பெண் மீது ‘ஆசிட்’ வீசியவருக்குஎதிராக 300 பக்க குற்றப்பத்திரிகை

சுங்கதகட்டே : இளம்பெண் மீது ஆசிட் வீசியவர் மீது, போலீசார் 300 பக்க குற்றப்பத்திரிகையை தயார் செய்துள்ளனர். விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.பெங்களூரு சுங்கதகட்டேயில், ஏப்ரல் 28ல் காதலை ஏற்க மறுத்த இளம்பெண் மீது, நாகேஷ், 30 என்பவர் ஆசிட் வீசி தப்பி ஓடினார். 16 நாட்களுக்கு பின் அவரை, தமிழகத்தின் திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமம் ஒன்றில், பெங்களூரு காமாட்சிபாளையா போலீசார் கைது செய்தனர்.

latest tamil news

அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், 300 பக்க குற்றப்பத்திரிகையை தயார் செய்துள்ளனர். போலீசார் கூறியதாவது:ஆசிட் வீசிய பின், நாகேஷ் நடமாடிய திருவண்ணாமலை உட்பட 13 இடங்களில் போலீசார் நேரில் சென்று விசாரித்த தகவல் இடம் பெற்றுள்ளது; 60க்கும் மேற்பட்ட சாட்சிகளின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது; குற்றவாளியின் வாக்குமூலம் 10 பக்கத்துக்கு இடம் பெற்றுள்ளது. இளம்பெண் மீது அவர் வீசியது, ‘சல்பியுரிக் ஆசிட்’ என்பது தெரியவந்துள்ளது.

இளம்பெண்ணின் ஆடை, கூந்தல், சருமம் போன்றவற்றில் சேகரிக்கப்பட்ட தடயங்களின் ஆய்விலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதற்காக, அவர், 9 லிட்டர் ஆசிட் வாங்கி இருந்தார். அதில் 1 லிட்டரை எடுத்து சென்றார். அரை லிட்டர் ஆசிட்டை இளம்பெண் மீது வீசிய பின் மீதியை கீழே ஊற்றி விட்டார். மீதம் உள்ள 8 லிட்டர் ஆசிட், அவரது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கண்காணிப்பு கேமரா, மொபைல் போன் உட்பட பல்வேறு தொழில்நுட்ப ஆதாரங்களும் சேர்க்கப்பட்டுள்ளது.
இன்னும் சிலரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டி உள்ளது. இப்பணி முடிந்த உடன் விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதற்கிடையில், ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நலம் தேறி வருகிறது. சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

தாயை கொன்று நாடகமாடிய மகன் கைது

சிக்கமகளூரு : பண விஷயமாக, மகனே தாயை கொலை செய்து, தீ விபத்தில் இறந்ததாக நாடகமாடியது, போலீசார் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.சிக்கமகளூரின், ஹச்சடமனே கிராமத்தில் வசித்தவர் லதா, 50. இவரது மகன் பசவராஜ், 25. பணம் விஷயமாக தாய்க்கும், மகனுக்கும் அவ்வப்போது தகராறு நடந்து வந்தது.கடந்த 18ல், இதே விஷயமாக இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது.அப்போது அடுப்பு ஊதும்குழலால், தாயை அடித்து கொலை செய்தார். அதன்பின் உடலை, டீசல் ஊற்றி எரித்தார். உறங்கும் போது மெழுகுவர்த்தி கீழே விழுந்து தீப்பிடித்ததால், தாய் இறந்ததாக நாடகமாடினார்.உறவினர்கள், அக்கம், பக்கத்தினரை நம்ப வைத்து இறுதி சடங்குகள் நடத்தினார். சம்பவம் தொடர்பாக, அல்துர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மகன் பசவராஜே, தாயை கொலை செய்தது வெளிச்சத்துக்கு வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

காதலர் தற்கொலை

பெலகாவி, சவதத்தியின் பூதிகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திர தெனகி, 27. இவரும், யரகட்டியின் மத்லுர் கிராமத்தின் ரேணுகா, 26 என்பவரும் சில ஆண்டுகளுக்கு முன், ராணி சென்னம்மா பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது அறிமுகமாகினர். இது காதலாக மாறியது.தனியார் மருத்துவமனையில் செவிலியாக பணியாற்றும் ரேணுகா, சமீப நாட்களாக ராமச்சந்திராவை விட்டு விலக துவங்கினார்.

இதனால் மனம் வருந்திய இவர், நேற்று முன்தினம் இரவு, பேச வேண்டும் என கூறி, பெலகாவியின் பசவ காலனிக்கு, ரேணுகாவை வரவழைத்தார்.அப்போது வாக்குவாதம் முற்றியதில், ஒயரால் ரேணுகாவின் கழுத்தை நெரித்து கொலை செய்த ராமச்சந்திரா, அதே ஒயரில் தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை, இவர்கள் இறந்து கிடந்ததை பார்த்த சிலர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.ஏ.பி.எம்.சி., போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.