துணை ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகிய மம்தா… ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகள் திட்டம் தோல்வியா?!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்மு வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் முடிகிறது. முன்னதாக ஆகஸ்ட் 6-ஆம் தேதி புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மேற்கு வங்காள மாநில ஆளுநராக இருந்த ஜெக்தீப் தன்கர் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் சார்பில், காங்கிரஸ் கட்சியின் மார்கரெட் ஆல்வா களம் இறக்கப்பட்டுள்ளார்.

ஆல்வா களம்

இதை முன்னிட்டு மார்கரெட் ஆல்வா மனு தாக்கல் செய்த போது, எதிர்க்கட்சி என்ற முறையில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் எந்தத் தலைவரும் அப்போது வரவில்லை. அத்துடன் வேட்புமனுவில் கட்சி சார்பில் யாரும் கையெழுத்திடவும் இல்லை. இதனால் அப்போதே மம்தா ஆதரவு குறித்து சந்தேகம் எழுந்தது. ஜெக்தீப் தன்கருக்கு, திரிணமூல் எம்.பி.க்கள் வாக்களிக்க திட்டமிட்டுள்ளதாக கூட கருதப்பட்டது.

அதை உறுதி செய்யும் விதமாக திரிணமூல் மாநிலச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான குணால் கோஷ் “மொத்தம் 17 எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மார்கரெட் ஆல்வாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இருக்கிறதா அல்லது இல்லையா என்று கேட்கிறீர்கள். இதில் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளன. எனவே, குடியரசு துணைத்தலைவர் தேர்தல் விவகாரத்தில் கட்சி ஆலோசனை நடத்தி வருகிறது. ஜெக்தீப் தன்கர், எங்கள் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியின் தீவிர ரசிகர். மார்கரெட் ஆல்வா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் தீவிர ஆதரவாளர்.

மம்தா பானர்ஜி, ஜகதீப் தன்கர்

ஜெக்தீப் தன்கர், தொடக்கத்திலிருந்தே பாஜகவில் இருந்தவர் கிடையாது. அவர் காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளிலிருந்திருக்கிறார். வி.பி. சிங் தலைமையில் மத்தியில் ஆட்சி இருந்த போது என்னை ஒரு முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்தது என்று ஜெக்தீப் தன்கரே எங்களிடம் கூறியிருக்கிறார். மம்தா காயமடைந்து சிகிச்சையிலிருந்தபோது அவரை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார் தன்கர்” என்பதைக் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறும்போது, “இந்த விஷயத்தில் திரிணமூல் காங்கிரஸ் நிலை தெளிவாக உள்ளது. பிரதமர் மோடியை எந்த வகையிலும் கோபப்படுத்த திரிணமூல் காங்கிரஸார் விரும்பவில்லை. ஏனென்றால் பிரதமர் மோடி அதிருப்தி அடைந்தால் கட்சியினரில் பலர் சிறைக்கு செல்லவேண்டியிருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். உண்மையில் மம்தாவின் ஒரே வேலை எதிர்க்கட்சி ஒற்றுமையை உடைப்பதுதான். இந்த விவகாரத்தில் எதிர்க் கட்சிகளிடம் ஒற்றுமை ஏற்படும் போது அதை ஊக்கப்படுத்த வேண்டியது காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு. ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளை வழி நடத்த மம்தா விரும்பினார். அது நடக்காது என்று தெரிந்த உடன் ஓடிவிட்டார். ஆனால் காங்கிரஸ் பின்வாங்க வில்லை.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

குடியரசுத் தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு முதல்வர் மம்தா உதவவில்லை. அவர் பாஜகவுடன் எந்த மோதலையும் விரும்பவில்லை. அதனால்தான் தற்போது மார்கரெட் ஆல்வாவுக்கு வாக்களிக்காமல் புறக்கணிக்க விரும்புகிறார்கள். பாஜக-வுக்கும் திரிணாமுல் இடையே ஒரு புரிதல் உள்ளது. ஜெக்தீப் தன்கர், அடிக்கடி மம்தா பானர்ஜியை சந்தித்தார். டார்ஜிலிங்கில் மம்தா பானர்ஜி, அசாம் முதல்வர் சர்மாவை அவர் சந்தித்த பிறகே குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதாவது அவர்களிடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

பாஜக தலைவர் திலீப் கோஷ்

“இந்த விஷயத்தில் மம்தா குழப்பத்தில் இருக்கிறார்” என்று மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.

குடியரசு துணை தலைவர் தேர்தலில் மம்தாவின் ஆதரவு யாருக்கு இருக்கும் என்று அரசியல் களத்தில் பேசுபொருளான போது அதற்கோர் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, “வரும் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் விலகி இருக்கும். இந்த தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் ஜெக்தீப் தன்கரையும் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரிக்காது, எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவையும் ஆதரிக்காது” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி அபிஷேக் பானர்ஜி

மேலும், “35 எம்.பி.க்களைக் கொண்ட திரிணாமுல் காங்கிரஸைக் கலந்தாலோசிக்காமல் எதிர்க்கட்சிகளால் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். நாங்கள் சில பெயர்களை முன்மொழிந்தோம், அவை ஆலோசனையில் இருந்தன. ஆனால் எங்கள் ஆலோசனையின்றி பெயர் முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், எதிர்க்கட்சி ஒற்றுமை என்பது குடியரசுத் தலைவர் அல்லது குடியரசு துணைத் தலைவர் தேர்தலின் அளவுகோலைப் பொறுத்தது அல்ல. மார்கரெட் ஆல்வாவுக்கு, மம்தா பானர்ஜியுடன் நல்ல உறவு உள்ளது. ஆனால், தனிப்பட்ட உறவு அரசியலில் ஒரு விஷயமல்ல” என அபிஷேக் பானர்ஜி தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

“ஏற்கனவே, ‘காங்கிரஸ் இருக்கக்கூடிய இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம்’ என்று, ஜெகன்மோகன், நவீன் பட்நாயக், சந்திரசேகர் ராவ், மாயவதி விலகியிருந்த நிலையில் இப்போது அந்த வரிசையில் மம்தாவும் இணைந்துவிட்டார். ‘காங்கிரஸ் இல்லா இந்தியாவை உருவாக்குவோம்’ என்கிற பாஜக-வின் திட்டத்திற்கு இவர்களைப் போன்ற மாநிலக் கட்சிகள் ஏதோ ஒரு வகையில் உறுதுணையாக இருக்கிறார்கள் என்பது தான் உண்மை” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

மம்தா பானர்ஜி

இதற்கிடையே, கொல்கத்தாவில் 1993-ஆம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் நடத்திய பேரணியில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதை நினைவுக் கூறும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 21-ஆம் தேதி தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் திரண்ட மக்களுக்கு மத்தியில் உறையற்றிய மம்தா பானர்ஜி, ‘2024-ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் ஆளும் பாஜக கூட்டணியை ஆட்சியிலிருந்து வெளியேற்ற நடைபெறும் தேர்தல்’ என்று பேசி இருந்தார்.

இதற்கு பெரும் வரவேற்பு இருந்தாலும், ‘குடியரசு துணைத் தலைவர் தேர்தலிலேயே கூட்டணியினரிடம் ஒற்றுமை இல்லாத கருத்து இருக்கும் போது எப்படி, 2024 தேர்தலில் பாஜக கூட்டணியை ஆட்சியைவிட்டு அகற்ற முடியும்?” என்கிற கேள்வியினை முன் வைக்கின்றனர் மம்தாவின் எதிர் தரப்பினர்.

“மம்தா பேரணியில் பேசப்பட்ட கருத்து முக்கியமான ஒற்றை வரியாகும். 2024-ல் பாஜக-வை வீழ்த்துவது என்பது தேர்தலுக்கு முந்தய கூட்டணியாக இருக்காது, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியாகத்தான் இருக்கும்” என்கிறார்கள் மம்தாவின் பேச்சுக்குப் பிறகு தேசிய அரசியலை உற்று நோக்கும் அரசியல் பார்வையாளர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.