எல்லாம் இருக்கு ஆனால் நிம்மதி இல்லை – ரஜினிகாந்த் வருத்தம்

சென்னை : சென்னையில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், ‛‛பணம், பேர், புகழ் என என் வாழ்வில் நான் அனைத்து உச்சங்களையும் தொட்டுவிட்டேன். ஆனால் 10 சதவீதம் கூட நிம்மதி கிடைக்கவில்லை'' என்றார்.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா சார்பில் ஆன்மிக நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க நூலை வெளியிட்டார்.

அதன்பின்னர் இந்த விழாவில் அவர் பேசியதாவது : யோகா நிகழ்ச்சிக்கு இவ்வளவு கூட்டம் வரும் என எதிர்பார்க்கவில்லை. என்னை பெரிய நடிகர் என்று இங்கு சொன்னார்கள். ஆனால் இது பாராட்டா, திட்டா என தெரியவில்லை. நான் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்தது ‛‛ராகவேந்திரா, பாபா'' படங்கள் மட்டும் தான். இந்த படங்கள் வந்த பின்னர் அவர்களை பற்றி மக்கள் நிறைய தெரிந்து கொண்டனர். நிறைய பேர் இமயமலைக்கு சென்று வந்தார்கள். என் ரசிகர்கள் சிலர் சன்னியாசியாக மாறி உள்ளனர். ஆனால் நான் இன்னும் நடிகராக உள்ளேன்.

இமயமலையில் இயற்கையாகவே அமைந்த சொர்க்கம். இங்குள்ள சில மூலிகைகளை சாப்பிட்டால் ஒருவாரத்திற்கு புத்துணர்ச்சி இருக்கும். இந்த உலகத்தை விட்டு செல்லும்போது சொத்து சேர்த்து வைத்து செல்வதை விட நோயாளியாக இல்லாமல் செல்வது முக்கியம். உடல் ஆரோக்கியம் முக்கியமானது. இல்லையென்றால் மருத்துவமனை செல்ல வேண்டும். நான் இரண்டு முறை மருத்துவமனை சென்று வந்தேன்.

அதேப்போன்று அறிவையும் வளர்க்க வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் சொல்லும் நல்ல விஷயங்களை கேட்க வேண்டும். நற்சிந்தனைக்கு புத்தகங்கள் வாசிக்க வேண்டும். வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க வேண்டும். என் வாழ்வில் பணம், பேர், புகழ், பெரிய பெரிய அரசியல்வாதிகள் என எல்லாவற்றையும் கடந்து எல்லா உச்சங்களையும் தொட்டுவிட்டேன். ஆனால் சித்தர்களிடம் உள்ள நிம்மதி, மகிழ்ச்சியில் 10 சதவீதம் கூட எனக்கு இதுவரை கிடைக்கவில்லை.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.