2 சிறுவர்களின் ஆசைநிறைவேற்றிய போலீசார் | Dinamalar

பெங்களூரு:போலீஸ் சீருடை அணிந்து, இடுப்பில் துப்பாக்கி, கையில் வாக்கி டாக்கியுடன் வந்த இரண்டு சிறுவர்களுக்கு, போலீஸ் ஏட்டுகள், அதிகாரிகள், ‘சல்யூட்’ அடித்தனர். இந்த சிறுவர்கள் நாள் முழுதும், போலீஸ் அதிகாரியாக பணியாற்றினர்.தமிழகத்தின் ஓசூரைச் சேர்ந்தவர் மிதிலேஷ், 14; கேரளாவைச் சேர்ந்தவர் முகமது சல்மான், 14; இருவரும் புற்றுநோயால் அவதிப்படுகின்றனர். இரண்டு சிறுவர்களும், பெங்களூரின் கித்வாய் மற்றும் நாராயணா இருதாலயா மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.உயிருக்கு போராடும் சிறுவர்களுக்கு, எதிர்காலத்தில் போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவிருந்தது. இதை, ‘மேக் எ விஷ்’ என்ற தொண்டு அமைப்பு, உயர் போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற, வடகிழக்கு மண்டல துணை கமிஷனர் பாபா முன்வந்தார். நேற்று முன்தினம், சிறுவர்கள் இருவரும் சீருடை அணிந்து, துணை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து, அவரது நாற்காலியில் அமர்ந்து மகிழ்ந்தனர். அதன்பின் கோரமங்களா போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். காக்கி சீருடை அணிந்து, இடுப்பில் துப்பாக்கி வைத்து, கையில் வாக்கி டாக்கியுடன் வந்த இவர்களுக்கு அதிகாரிகளும், ‘சல்யூட்’ அடித்து வரவேற்றனர்.இன்ஸ்பெக்டர் நாற்காலியில் அமர்ந்து, ஒரு நாள் முழுதும் அதிகாரியாக பணியாற்றினர். ரோந்து பற்றி தகவல் கேட்டனர். ‘குற்ற சம்பவங்கள் நடக்காமல், மக்கள் பயமின்றி வாழும்படி பார்த்துக் கொள்ளுங்கள்’ என, உத்தரவிட்டனர். இதை ஏற்று போலீசார், ‘சல்யூட்’ அடித்தனர்.துணை கமிஷனர் பாபாவும், இன்ஸ்பெக்டர் நடராஜும், அவர்கள் அருகிலேயே நின்று போலீஸ் நடைமுறைகள் குறித்து விளக்கினர். எந்த போலீசார், என்ன வேலை செய்கின்றனர் என்பதை விவரித்தனர். இறுதியில் அவர்களுக்கு பரிசளித்து வழியனுப்பினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.