டிவிக்களில் கட்டப் பஞ்சாயத்து: தலைமை நீதிபதி கண்டனம்| Dinamalar

ராஞ்சி : ”கட்டப் பஞ்சாயத்து போல, ஊடகங்கள் தனியாக நீதிமன்றங்களை நடத்தி தீர்ப்புகளை அறிவிப்பது, நாட்டின் ஜனநாயகத்துக்கும், நீதித் துறைக்கும் பெரும் கேடாக அமைந்துள்ளது,” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா குறிப்பிட்டுள்ளார்.

விவாதங்கள்

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், நீதிபதி சத்ய பிரதா சின்ஹா நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது:மிகப்பெரும் பிரச்னையில் அனுபவம் வாய்ந்த நீதிபதிகளே எப்படி கையாள்வது என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்துகின்றனர். ஆனால், ஊடகங்கள் மிகச் சாதாரணமாக இது போன்ற பிரச்னையில் தீர்ப்பு வழங்குகின்றன.எவ்வித ஆய்வும் செய்யாமல், உண்மையை தெரிந்து கொள்ளாமல், ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு, ‘டிவி’ உள்ளிட்டவற்றில் விவாதங்கள் நடத்தப்படுகின்றன. ‘கங்காரு நீதிமன்றம்’ என்று கூறப்படும் கட்டப் பஞ்சாயத்தில் ஊடகங்கள் ஈடுபடுகின்றன. ஒரு சாராருக்கு ஆதரவாக அவை தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

பத்திரிகை போன்ற அச்சு ஊடகங்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், ‘டிவி’ போன்ற மின்னணு ஊடகங்கள், சமூக வலைதளங்களுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. அதனால், தங்களுடைய விருப்பத்துக்கு ஏற்ப, அவை செய்தி வெளியிடு கின்றன.இது, நீதித் துறை நடவடிக்கைகளில் பெரும் பாதிப்பை, தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பொறுப்பில்லாத இந்த செயல்களால், நம் நாட்டின் ஜனநாயகத்துக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதனால், ஜனநாயகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.சில ஊடகங்களில் நீதிபதிகள் குறித்தே விமர்சித்து நிகழ்ச்சிகள், விவாதங்கள் நடத்தப்படுகின்றன. இதனால், ஊடகங்களுக்கான பொறுப்புணர்வுகளை நிர்ணயிக்க வேண்டியது அவசியமாகிறது.

சுய கட்டுப்பாடு

சமீபத்தில் நடந்துள்ள பல சம்பவங்கள் இதை உணர்த்துகின்றன. ஊடகங்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். நீதித்துறையின் செயல்பாட்டில் தலையிடுவதாக, இடையூறு செய்வதாக ஊடகங்களின் செயல்பாடு கள் இருக்கக் கூடாது.இதற்கெல்லாம் பதிலளிக்காமல் இருப்பதால், நீதித்துறையை பலவீனமாக கருத வேண்டாம். உங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து செயல்படாமல், வெளியில் இருந்து கட்டுப்பாடுகளை நிர்ணயிக்கும் நிலையை உருவாக்கி விட வேண்டாம்.மக்களுக்கு நாட்டு நடப்பு குறித்து தெளிவாக விளக்குவது, நம் நாடு ஒருங்கிணைந்து, அமைதியாக முன்னேறி செல்ல வழிகாட்டுவது போன்றவையே ஊடகங்களின் கடமையாகும்.

ஆனால், இதற்கு எதிர்மாறாகவே ஊடகங்கள் செயல்படுகின்றன.நீதிபதிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதும் தற்போதைய சூழ்நிலையில் கட்டாயமாகிறது. பல ஆண்டுகள் நீதிபதிகளாக பணியாற்றும்போது, பலருக்கு தண்டனை வழங்கியிருப்பர். ஆனால், பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும், அவர்களுக்கான பாதுகாப்பும் விலக்கி கொள்ளப்படுகிறது.

பாதுகாப்பு

அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப, பதவி ஓய்வுக்கு பிறகும் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஆனால், நீதிபதிகளுக்கு அதுபோன்ற பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை.இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.