விமானத்தில் மயங்கிய பயணி; முதலுதவி அளித்த தமிழிசை சௌந்தரராஜன்; குவியும் பாராட்டு

Tamilisai Soundararajan treat first aid to fainted co-passenger in flight: நடுவானில் விமானத்தில் மயக்கமடைந்த பயணிக்கு தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுனருமான தமிழிசை செளந்தரராஜன் முதலுதவி அளித்த நிலையில், சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று அதிகாலை 3 மணிக்கு டெல்லியிலிருந்து ஹைதராபாத்துக்கு விமானத்தில் பயணம் செய்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, ​​ஒரு பயணி திடீரென மயக்கம் அடைந்துள்ளார். அதைப்பார்த்த விமான பணிப்பெண், அவசர உதவிக்கு டாக்டர்கள் யாராவது உள்ளீர்களா?, சக பயணி ஒருவர் மயங்கிய நிலையில் உள்ளார் என அறிவிப்பு வெளியிட்டார். உடனடியாக மருத்துவரான தமிழிசை சௌந்தரராஜன் அந்த பயணியிடம் சென்று ஸ்டெதஸ்கோப் வைத்து பார்த்து, தேவையான முதலுதவி சிகிச்சை அளித்தார்.

இதையும் படியுங்கள்: புத்தகம், பேனாவுடன் மாணவி ஸ்ரீமதியின் இறுதி ஊர்வலம்; பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நல்லடக்கம்

பின்னர் அந்த பயணியின் அருகிலேயே அமர்ந்து அவரின் உடல்நிலையை கண்காணித்தபடியே ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பயணம் செய்தார். இதன்பின் சிறிது நேரத்தில் அந்த பயணி கண்விழித்ததால் சக பயணிகள் நிம்மதியடைந்தனர். தொடர்ந்து விமானம் தரையிறங்கும் வரை அந்த பயணி அருகிலேயே அமர்ந்து அவரின் உடல்நிலையை கண்காணித்து வந்தார் தமிழிசை சௌந்தரராஜன். விமானம் ஹைதராபாத்தில் இறங்கியதும் அந்த பயணி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பயணியின் நிலையை கண்டு துரிதமாக சரியாக செயல்பட்ட விமான பணிப்பெண்ணை தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டினார்.

அவசர உதவி செய்த தமிழிசை சௌந்தரராஜனை சக பயணிகள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ஆளுனர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தை சக பயணி ஒருவர் புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ஆளுநராக இருந்து வரும் நிலையிலும் மருத்துவராக தனது கடமையை ஆற்றிய தமிழிசை சௌந்தரராஜனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.