சென்னை: அனைவரும் இலவச பூஸ்டர் தவணை கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் இன்று 32-வது சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா தொற்றால் மக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். பலர் உயிரிழந்துள்ளனர். எனவே, தடுப்பூசி போட்டுக் கொள்வதே பாதுகாப்பானது.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடந்து வருகிறது. இந்தியா முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தொடரும் கரோனா தொற்றை கருத்தில்கொண்டு, பிரதமரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட மத்திய அரசு, 18-59 வயது பொதுமக்கள் அனைவருக்கும் இலவச கரோனா பூஸ்டர் தவணை தடுப்பூசியை அறிமுகம் செய்துள்ளது.
ஏராளமான சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் நமது இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு நினைவாக 75 நாட்கள் நடைபெறுகிறது. அன்பான சகோதர, சகோதரிகளே. நீங்கள் அனைவரும் பூஸ்டர் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டு பாதுகாப்பாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.