மகாராஷ்டிராவில் பணியை முடித்துக்கொண்டு மேற்கு வங்கத்தில் முகாமிட்டிருக்கும் சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தங்கள் வேலையை முழுவேகத்தில் தொடங்கியிருக்கின்றனர். அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மேற்கு வங்கத்தில் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அமைச்சர் பரேஷ் அதிகாரி உட்பட 12 பேர் இல்லங்களில் ஒரே நேரத்தில் ரெய்டு நடத்தினர். மேற்கு வங்க பள்ளிகளுக்கு ஆசிரியர் நியமிக்கப்பட்டதில் நடந்த முறைகேடு தொடர்பாக இந்த ரெய்டு நடத்தப்பட்டது.
இதில் வெளிநாட்டு கரன்சி, முக்கிய ஆவணங்கள், தங்கம் உட்பட ஏராளமான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரெய்டில் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவை மொத்தம் ரூபாய் 20 கோடி அளவுக்கு இருந்தது. இது தவிர 20 மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஆசிரியர் தேர்வு முறைகேட்டில் கிடைத்தவை என்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அதிகாரிகள் தொடர்ந்து பார்த்தா இல்லத்தில் ரெய்டு நடத்தி வந்தனர். அவர்களில் சிலர் இரவில்கூட பார்த்தா வீட்டிலிருந்து விடிய விடிய ரெய்டை நடத்தியதோடு… பார்த்தாவிடமும் விசாரணை நடத்தினர் . இந்த விசாரணையை தொடர்ந்து பார்த்தா சாட்டர்ஜியை நேற்று காலையில் கைதுசெய்தனர். அவர் அமலாக்கப் பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
ஏற்கெனவே ஆசிரியர் தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதனடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் கடந்த ஏப்ரல் 26 மற்றும் மே 18-ம் தேதிகளில் பார்த்தா சாட்டர்ஜியிடம் விசாரணை நடத்தியது. பார்த்தா இதற்கு முன்பு கல்வி அமைச்சராக இருந்தபோது இந்த மோசடி நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
பார்த்தா இந்த ஊழலை தானாக செய்யவில்லை என்றும், யாருக்காகவோ செய்திருப்பதாக பா.ஜ.க குற்றம்சாட்டியிருக்கிறது. அதோடு பா.ஜ.க ஐ.டி பிரிவு பொறுப்பாளர் அமித் மால்வியா வெளியிட்டிருக்கும் ட்விட்டர் செய்தியில், “அர்பிதா முகர்ஜி ஒடிசாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக செய்த பணிகளை மம்தா பானர்ஜி பாராட்டியிருக்கிறார். அவரது வீட்டில் இருந்துதான் ரூபாய் 20 கோடி கைப்பற்றப்பட்டிருக்கிறது. அர்பிதா நல்ல காரியங்களை செய்கிறார் என்று மம்தா பானர்ஜிக்கு தெரியும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், “பணம் பறிமுதல் செய்யப்பட்டதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எந்த வித தொடர்பும் கிடையாது. யார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறாரோ அவரோ அல்லது அவரின் வழக்கறிஞரோதான் இது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டும்” என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில், நேற்று மாலை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அர்பிதா முகர்ஜி பெங்காலி, ஒடிசா, தமிழ் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். அதோடு பார்த்தா சாட்டர்ஜியின் துர்கா பூஜை தொடர்பான விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார். பார்த்தா சாட்டர்ஜி அடிக்கடி அர்பிதா இல்லத்துக்குச் சென்று வருவார் என்றும் கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதன் மூலம் அவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையில் பா.ஜ.க ஈடுபட்டிருக்கிறது. ஏற்கெனவே மகாராஷ்டிராவில் அதுபோல் நெருக்கடி கொடுத்துதான் சிவசேனா தலைவர்களை தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டு வந்து தற்போது ஆட்சியமைத்திருக்கிறது. மேற்கு வங்கத்திலும் அது போன்று ஏதாவது ஏக்நாத் ஷிண்டே கிடைப்பாரா என்று பா.ஜ.க வலைவீச ஆரம்பித்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.