ஜெருசலேம்,
இஸ்ரேலின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கர்மி யோசப் நகரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. விருந்தில் கலந்து கொண்ட சிலர் அங்கிருந்த நீச்சல் குளத்தில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது நீச்சல் குளத்தின் அடியில் திடீரென துளை ஏற்பட்டு, பெரிய குழி உருவானது. நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த 32 வயது வாலிபர் உள்பட 2 பேர் அந்த குழிக்குள் விழுந்தனர். அவர்களில் ஒருவர் எப்படியோ போராடி மேலே வந்துவிட்டார். ஆனால் குழிக்குள் விழுந்த 32 வயது வாலிபர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடல் 43 அடி ஆழத்தில் இருந்து மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக விருந்து நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தின் உரிமையாளர்களான கணவன்-மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.